புதிய பூச்சி இனம் ஒன்றுக்கு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஆகவுள்ள டொனால்ட் டிரம்பின் பெயரை கலிபோர்னிய விஞ்ஞானிகள் வைத்துள்ளனர். 

நியோபல்பா டொனால்ட்ரம்பி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய வகைப் பூச்சியின் தலையில் மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில் மேல்பகுதிகள் அமைந்துள்ளன. அதனால் குறித்த பூச்சியினம் டிரம்பின் தலைமுடி போல இருப்பதால் அப்பெயரை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பூச்சியின் மேல்பகுதியை பார்த்ததும் ட்ரம்பின் தலைமுடியைப் போல் இருப்பதை தான் உணர்ந்து, இப்பெயரை வைத்துள்ளதாக பரிணாம உயிரியில் விஞ்ஞானி வஸ்ரிக் நஸாரி இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த புதிய பெயரால் பூச்சிக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என்பதோடு, இந்த பூச்சி இருக்கும் இடங்களை பாதுகாக்க வழிவகுக்கும். அத்தோடு இதுநாள் வரையிலும் கவனிக்கப்படாமல் இருந்த பல்லுயிர்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அமெரிக்காவில் ஏற்படும். என நஸாரி தெரிவித்துள்ளார். 

குறித்த இந்த பூச்சி வகைகளையும், மற்ற ஆராய்ச்சிக்கூடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட வகைகளையும் ஆராய்ந்த பின்னர், தாம் புதிய வகை பூச்சி இனத்தை கண்டுபிடித்துள்ளதை விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.

அத்தோடு சமீபத்தில் ஒரு புதிய வகை மீனினத்திற்கு பராக் ஒபாமாவின் பெயர் வைக்கப்பட்ட நிலையில் தற்போது புதியவகை பூச்சிக்கு டொனால்ட் டிரம்பின் பெயர் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.