அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் கட்டளைக்கு இணங்க, லிபியாவில் இயங்கிவந்த ஐஎஸ் பயங்கரவாதிகளின் இரண்டு முகாம்கள் அமெரிக்க விமானப் படையினரால் நேற்றிரவு தாக்கி அழிக்கப்பட்டது. இதில் சுமார் எண்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இத்தாக்குதல்களை பி-2 ரக குண்டுதாங்கி விமானங்கள் மேற்கொண்டன. அமெரிக்காவின் மிசோரியில் இருந்து புறப்பட்ட இந்த விமானங்கள் நூறுக்கும் அதிகமான குண்டுகளை முகாம்களின் மீது வீசியதாகத் தெரியவருகிறது. இந்தத் தாக்குதலுக்காக குறித்த விமானங்கள் முப்பது மணிநேரம் பறந்ததாகவும் தெரியவந்துள்ளது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த விமானங்கள் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அழிக்கப்பட்ட இந்த முகாம்களில் பயிற்சி பெற்று வந்த பயங்கரவாதிகளை, ஐரோப்பா உள்ளிட்ட அண்டை நாடுகளில் தாக்குதலில் ஈடுபடுத்த ஐஎஸ் தலைமை எண்ணியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த முகாம்கள் குறித்து ஒபாமாவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, அவற்றைத் தாக்கி அழிக்கும்படி ஒரு சில தினங்களுக்கு முன் அவர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரிலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதுவே ஒபாமாவின் பணிப்பின் பேரில் நடத்தப்பட்ட கடைசித் தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.