இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமாதானத் தூதுவராகச் செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் இலங்கையுடன் இணைந்து பணியாற்றவிருக்கிறார், சுற்றுச்சூழல் விவகாரம் தொடர்பில்!

உலகப் பொருளாதா அமைப்பு மாநாட்டுக்காக சுவிட்ஸர்லாந்து சென்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்ட இயக்குனராகப் பணியாற்றிவரும் எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்து இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இப்பேச்சுவார்த்தையின் முடிவில் பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்ற எரிக் சொல்ஹெய்ம் பசுமைப் பொருளாதாரம், தொடர்ச்சியான சுற்றுலா வாய்ப்புகள், வனவிலங்கு பாதுகாப்பு, நீர்வளப் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் குறித்து இலங்கை-ஐக்கிய நாடுகள் இடையே பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கச் சம்மதித்திருப்பதாக எரிக் சொல்ஹெய்ம் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை-ஐநா இடையிலான இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தை வரையறை செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக பிரதமரின் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

1998 முதல் 2005 வரையான காலப் பகுதியில் நோர்வேயின் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.