இலங்கை அணித் தலைவரை மாற்றுவது தொடர்பில் கலந்தாலோசிக்கவில்லை. அடுத்த உலகக்கிண்ணம் வரை அஞ்சலோ மெத்தியூஸ் தான் அணித்தலைவரென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸை மாற்றுவது தொடர்பில் நாம் கலந்துரையாடவில்லை. அணியில் தற்போது இருக்கும் குறைநிறைகளை பற்றியே நாம் ஆராய்ந்தோம்.

அணித் தலைமையை மாற்றுவது தொடர்பில் நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடவில்லை. 

வேகப்பந்து வீச்சில் எமது அணி தற்போதும் மந்தகதியிலேயே உள்ளது. அதை நிவர்த்தி செய்வதற்காக நாம் ஆராய்ந்து வருகின்றோம். எமது அணியில் 140 கீலோ மீற்றர் வேகத்தில் பந்தை வீசக் கூடிய வல்லமையானவர்கள் தற்போது இல்லை.

2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் வரை அஞ்சலோ மெத்தியூஸ் தான் அணித் தலைவராக செயற்படுவார்.

அணியில் விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் நாம் போதியளவு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். திறமைகளை வெளிப்படுத்துவது அவர்களின் கைகளில் தான் உள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.