ஆயுள் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளிவந்த தன் தந்தையை இருபத்து மூன்று ஆண்டுகளின் பின் கண்ட இன்ப அதிர்ச்சியில் இளைஞர் ஒருவர் மரணமானார்.

கொலை ஒன்றுடன் தொடர்புடையது நிரூபிக்கப்பட்டதையடுத்து 1996ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஹசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருடைய மகன் சஜித்துக்கு ஒரு வயது.

தண்டனைக் காலத்தில் ஒருபோதும் பிணையில் வெளிவரவோ, குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கவோ ஹசன் முயற்சிக்கவில்லை. தொலைபேசி மூலமே குடும்பத்தினரின் சுகத்தை விசாரித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் 17ஆம் தேதி அவர் விடுதலையானார். அவரை வரவேற்பதற்காக சிறைச்சாலையின் வெளியே அவரது உறவினர்கள் காத்திருந்தனர். ஹசன் அவர்கள் அருகே சென்று கட்டியணைத்துத் தனது அன்பை வெளிப்படுத்தினார்.

தன் தந்தையைக் கண்ட உற்சாக மிகுதியில் இருந்த சஜித், திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சரிந்தார். இதைக் கண்ட ஹசன் மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக சஜித்தை அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். எனினும், அதீத சந்தோஷத்தால் ஏற்பட்ட மாரடைப்பினால் சஜித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

23 ஆண்டு காலம் பிரிந்திருந்த தன் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழக் கற்பனை செய்திருந்த ஹசன் இதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்.

தந்தையின் விடுதலைக்குப் பின் திருமணம் செய்துகொள்ள சஜித் எண்ணியிருந்தது குறிப்பிடத்தக்கது.