திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.

டெல்லி சென்றிருக்கும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா, அங்கு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். திருகோணமலை துறைமுகம் விரைவில் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

“ஆழ்கடல் துறைமுகங்களில் திருணோகமலை துறைமுகம் முக்கியமான ஒன்று. அதை இந்தியாவுக்கு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் சம அளவிலான உறவைப் பேணும் வகையில் இத்துறைமுகத்தை இலங்கை பயன்படுத்திவந்தது.

“ஆனால், அம்பாந்தோட்டையில் சீனாவின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட துறைமுகத்தால் நாம் எதிர்பார்த்த பிரதிபலன்கள் கிடைக்கவில்லை. பதிலாக, நாட்டுக்குப் பெரும் கடன் சுமையே ஏற்பட்டுள்ளது. இத்துறைமுகத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், கட்டுமானத்தின்போது இடம்பெற்ற ஊழல்கள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு திருகோணமலை துறைமுகம் குறித்த எமது கருத்தை மீளாய்வு செய்து வருகிறோம்.

“தற்போது தனியார் நிறுவனம் வசம் திருகோணமலை துறைமுகத்தின் திருத்த வேலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் உடனடியாகச் செய்து முடிக்கப்பட வேண்டிய சில வேலைகள் நிறைவுபெறும். இதன் பின்னரே துறைமுகத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வேலைகளை நடைமுறைப்படுத்துவோம்.”

இவ்வாறு அவர் அந்தப் பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.