வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் சி.ஐ.டி. யினர் என தம்மை தெரியப்படுத்திச் சென்ற இருவர் வீட்டை சோதனை செய்வதாக தெரிவித்து 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளை திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளம், பாம்- 2 பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு நேற்று இரவு 7.30 மணியளவில் சென்ற இருவர், தாம் சி.ஐ.டி. யினர் எனவும் உங்களது வீட்டில் கசிப்பு மற்றும் டைனமைற் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது எனவே வீட்டை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
வீட்டு உரிமையாளர் சோதனையிட அனுமதித்த போது, வீட்டில் இருந்த 5 இலட்சத்து 20 ஆயிரம் பெறுமதியான சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு சோதனையிடுவதாக தெரிவித்து வந்தவர்களிடம் கைத்துப்பாக்கி இருந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கொள்ளைச் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.