தமது விமானங்களில் தனியாகப் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பெண்களுக்கான பிரத்தியேக ஆசனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக இந்தியாவின் தேசிய விமான சேவையான எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

எயார் இந்தியா விமானங்களில் கடந்த மாதம் இடம்பெற்ற பெண்களுக்கு எதிரான சம்பவங்களை அடுத்தே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமது விமானங்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்கும் சௌகரியத்துக்கும் தாமே தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதன் அடிப்படையில், பெண்களுக்கான பிரத்தியேக ஆசனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வார இறுதி முதல் உள்நாட்டு விமானச் சேவைகளில் அறிமுகமாகும் இந்த வசதி, இவ்வருட இறுதிக்குள் அனைத்து எயார் இந்தியா விமானங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என்றும், இதற்காகப் பிரத்தியேகக் கட்டணங்கள் எதுவும் அறவிடப்பட மாட்டாது என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.