நடுவழியில் மாயமான எம்எச்370 என்ற மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள், மூன்று ஆண்டு காலத் தேடலின் பின் எதுவித தடயமும் கிடைக்காமலேயே இன்று (17) முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு விமானச் சிப்பந்திகள் உட்பட 239 பேருடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம் நடுவழியில் மாயமானது. இந்த விமானத்தைத் தேடும் பணியில் மலேசியா, அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து செயற்பட்டன.

777 போயிங் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் தரைப்பகுதியில் விழுந்திருந்தால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். எனவே, நிச்சயமாக இந்த விமானம் கடலிலேயே விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கவேண்டும் என்ற அனுமானத்தின் பேரில் கடலுக்குள் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்றன.

விமானத்திலிருந்து கடைசியாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில், குறித்த கடற்பிராந்தியத்தில் இந்த நடவடிக்கைகளை மூன்று நாடுகளும் இணைந்து முடுக்கி விட்டிருந்தன.

பல கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேடுதல் பணியின் இறுதிக் கட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடைய ஆழ்கடல் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டிருந்தது.

மூன்று வருடங்களாகத் தேடியும் பயனுள்ள ஆதாரம் எதுவும் கிடைக்காத நிலையில் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. இதனையடுத்து, தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கடைசிக் கப்பல் இன்று அப்பகுதியில் இருந்து நாடு திரும்பியது.

எவ்வாறெனினும், இந்தச் சிக்கலைத் தீர்க்காமல் விட்டுவிடக்கூடாது என்று, விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டுள்ள சுமார் 145 மில்லியன் டொலர்கள் பணத்தில் பெரும் பகுதியை மலேசியாவும், அவுஸ்திரேலியாவும் பகிர்ந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.