பாடசாலைக்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலாப்பயணியின் செயற்பாட்டால் சந்தோசத்தில் திளைத்த மாணவர்கள், ஆசிரியர்கள்

Published By: Priyatharshan

17 Jan, 2017 | 01:56 PM
image

நாட்டை சுற்றிப் பார்க்க ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ள சுற்றுப்பயணி ஒருவர் தனது செயற்பாட்டால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமொன்று சிகிரியா பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

டேவிட் என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து சுற்றுலாப்பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இவர் ஒருவார காலம் இலங்கையில் தங்கியிருந்து சிகிரியா, கண்டி, நுவரெலியா, மிரிஸ்ஸ மற்றும் சிவனொளிபாதமலை போன்ற சுற்றுலாத்தலங்களை பார்வையிடுவதற்காக திட்டமிட்டு சாரதியுடன் ஒரு வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

அவரது திட்டத்தின்படி முதலாவது சுற்றுலா விஜயமாக சிகிரியாவுக்கு சென்றுள்ளார். அங்கு சுற்றுலாவினை முடித்துவிட்டு செல்கையில் சிகிரியாவில் இருந்து 6 கிலோ மீற்றர் தொலைவில் பின்தங்கிய நிலையில் இருந்த சிகிரியா உடவெலயாகம கனிஷ்ட வித்தியாலயத்தை அவதானித்துள்ளார்.

கற்றலுக்கான எவ்வித அடிப்படை வசதிகளுமற்று அப் பாடசாலை இடம்பெறுவதை சுற்றுலாப்பயணி அவதானித்துள்ளார். 

இந்நிலையில் தான் சுற்றுலாவுக்காக வாடகைக்கு அமர்த்திய வாகனத்தையும் சாரதியையும் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள கடைகளில் பாடசாலைக்குத் தேவையான வெண்பலகை, பாடசாலை சுவர்களுக்கு பூசுவதற்காக பெயின்ற் மற்றும் பாடசாலை உபகரணங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்துள்ளார். 

குறித்த பாடசாலையில் உள்ள  11 வகுப்புகளுக்கும் தேவையான வெண்பலகைகைளை கொள்வனவு செய்துள்ளார்.

இதேவேளை, குறித்த பாடசாலையில் எவரது உதவியுமின்றி தானே முன்வந்து பாடசலைக்கு நிறப்பூச்சு பூசும் பணியையும் குறித்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி மேற்கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்கள் மற்றும் ஆசரியர்கள் அவருக்கு உதவியாக இருந்து வருகின்றனர். 

இவ்வாறான உதவிகளை தான் எதிர்காலத்திலும் இலங்கைக்கு வரும்போது மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right