'சண்டே லீடர்' பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள லசந்த விக்­ர­ம­துங்­கவின் மகள் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு வாக்கு மூலம் அளித்­துள்ளார். 

கொலை இடம்­பெற சில தினங்­க­ளுக்கு முன்னர் தனது தந்தை தன்­னிடம் தெரி­வித்த விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தியே அவுஸ்­தி­ரே­லி­யாவில் வைத்து அவர் இவ்­வாறு தமது விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் வாக்கு மூலம் வழங்­கி­ய­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணை அதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்வா கல்­கிசை நீதிவான் நீதி­மன்­றுக்கு நேற்று அறி­வித்தார்.

ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்க படு­கொலை வழக்கு நேற்­றைய தினம் கல்­கிசை பிர­தான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்­னி­லையில் நேற்று இடம்­பெற்­றது. இதன் போது லசந்­தவின் கொலை வழக்­குடன் இணைந்த சம்­ப­வ­மான லசந்­தவின் சார­தியை கடத்திச் சென்று மரண அச்­சு­றுத்தல் விடுத்­த­தாக கூறப்­பட்டு கைது செய்­யப்­பட்டு பிணையில் உள்ள இரா­ணுவ புல­னா­யவுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் பிரே­மா­னந்த உட­லா­கம மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

அவர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி யுரான் லிய­னகே மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த நிலையில் பாதிக்­கப்­பட்ட தரப்­பான லசந்த விக்­ர­ம­துங்க குடும்­பத்­தினர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எஸ். ரண­கல பிர­சன்­ன­மானார்.

 இந் நிலையில் மன்­றுக்கு மேல­திக விசா­ரணை அறிக்­கை­யுடன் முன்­னி­லை­யான விசா­ரணை அதி­கா­ரி­யான சிறப்பு விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்வா, அவ்­வ­றிக்­கையை நீதிவான் மொஹம்மட் மிஹா­லுக்கு சமர்­பித்து பின் வரு­மாறு கருத்­துக்­களை முன் வைத்தார்.

,லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு­கொ­லையின் போது பயன்­ப­டுத்­தப்­பட்ட தொலை­பே­சிகள் தொடர்பில் நாம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இதில் அக்­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய 5 சிம் அட்­டைகள் தொடர்பில் நாம் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தினோம். இது தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­களில் அந்த சிம் அட்­டைகள் புறக் கோட்­டையில் உள்ள ஒரு விற்­பனை நிலை­யத்தில் இருந்தே பெறப்­பட்­டுள்­ள­மையை நாம் உறுதி செய்தோம்.

 அத்­துடன்  அந்த சிம் அட்­டை­க­ளுடன் பயன்­ப­டுத்­திய தொலை­பே­சி­க­ளையும் நாம் அடை­யாளம் கண்­டுள்ளோம். பிர­பல தொலை­பேசி இறக்­கு­மதி நிறு­வ­னத்­தினால் இறக்­கு­மதி செய்­யப்ப்ட்டு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்ள நோக்­கியா 1200 ரக தொலை­பே­சி­களே இக்­கொ­லைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

அந்த தொலை­பே­சி­களை விற்­பனைச் செய்த விற்­பனை நிலை­யத்தை கண்­ட­றிய தொடர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ளோம். தற்­போது 50 விற்­பனை நிலை­யங்கள் தொடர்பில் நாம் அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம். இது தொடர்பில் இது­வரை 34 பேரிடம் வாக்கு மூலங்­களைப் பதிவு செய்­துள்ளோம்.

அத்­துடன் லசந்­தவின் கொலையின் பின்னர் அவ­ரது கைய­டக்கத் தொலை­பேசி காணாமல் போனது. அதனை சுதத் பெரேரா என்­பவர் திரு­டி­யி­ருந்த நிலையில் கண்­டு­பி­டித்தோம். அவ­ரிடம் அது தொடர்பில் வாக்கு மூலம் பெற்­றுள்ளோம். 

அவ­ரது கை விரல் ரேகையைப் பெற்று, லசந்­தவின் காரில் இருந்த கொலை­யா­ளி­யி­னு­டை­யது என சந்­தே­கிக்கும் கைவிரல் ரேகை­யுடன் ஒப்­பீடுச் செய்தோம். எனினும் அது பொருந்­த­வில்லை என எமக்கு அறிக்கை கிடைத்­துள்­ளது.

இத­னை­விட ஏற்­க­னவே மன்றின் அனு­ம­தி­யுடன் பெறப்­பட்ட 266 இரா­ணுவ வீரர்­களின் கைவிரல் ரேகை­களை நாம் அந்த காரில் இருந்த ரேகை­யுடன் ஒப்­பீடு செய்தோம். அதில் எதுவும் பொருந்திப் போக­வில்லை என எமக்கு அறிக்கை கிடைத்­தது.

 இந் நிலையில் மேலும் 326 இரா­ணுவ வீரர்­களின் கைவிரல் ரேகை­களை பரி­சீ­லிக்க வேண்­டி­யுள்­ளது.

இத­னை­விட, லசந்த கொலை செய்­யப்­பட்ட பின்னர் அது குறித்த விசா­ர­ணை­களை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவே முதலில் முன்­னெ­டுத்­தது. இதன் போது பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­பா­ள­ராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ரா வாகிஸ்ட இருந்தார். இதன் போது முதலில் 17 இரா­ணுவ புல­னா­ய­வா­ளர்கள் கைது  செய்­யப்­பட்­டனர். 

பின்னர் அவர்கள் விடு­விக்­கப்­பட்­டனர். இது தொடர்பில் நாம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ரா வாகிஸ்­ட­விடம் விசா­ரணை செய்த போது,  தனது விசா­ர­ணையில் அவர்கள் கைது  செய்­யப்­ப­ட­வில்லை எனவும் அவர்­களை இரா­ணு­வமே அனுப்பி வைத்­த­தா­கவும் கூறினார்.

 இதனைத் தொடர்ந்து நாம் இரா­ணு­வத்­திடம் அது குறித்து விளக்கம் கோரினோம். அதற்கு இரா­ணுவம் பிரதிப் பொலிஸ்  மா அதி­பரின் அறி­வித்­தலை தொடர்ந்தே அந்த 17 பேரையும் அனுப்­பி­ய­தாக குறிப்­பிட்­டனர்.

இதில் இருந்து பயங்­க­ர­வாத புல­னா­யவுப் பிரிவு அப்­போது  செய்த விசா­ரணை ஒரு கண் துடைப்பு வேலை என்­பது புல­னா­கி­றது. இந் நிலையில் நாம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள, லசந்த விக்­ர­ம­துங்­கவின் மக­ளிடம் அங்கு சென்று வாககு மூலம் ஒன்­றினை பதிவு  செய்தோம். அதில், தனது தந்தை இறப்­ப­துக்கு சில தினங்­க­ளுக்கு முன்னர் கூறி­யி­ருந்த  விட­யங்­களை அவர் வெளிப்­ப­டுத்­தினார். 

அப்­போது தனது தந்தை மிக் விமான கொள்­வ­னவு தொடர்பில் தனக்கு ஆபத்து வரலாம் என தெரி­வித்­த­தா­கவும் அவ்­வாறு ஆபத்து ஏற்­படின் அதற்கு அப்­போ­தைய பாது­காப்பு செயலர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற­வேண்டும் என சுட்­டிக்­காட்­டி­ய­தா­கவும் தெரி­வித்தார்.

இத­னை­விட லசந்­தவின் சாரதி டயஸ் கடத்­தப்­பட்­டமை தொடர்பில் நாம்  சந்­தேக நப­ராக உட­லா­க­மவை கைது  செய்தோம். லசந்த கொலைக்கு கோத்தாவே காரணம் என டயஸ் சில இடங்களில் கூறியதனாலேயே அவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக எமது விசாரணைகளில் தெரியவந்தது.  எனவே இவ்விடயத்துக்கும் லசந்தவின் மகளின் வாக்கு மூலத்துக்கும் இடையே வேறுபாடுகள் இல்லை என தெரிவித்தார்.

 அதன் பின்னர் சந்தேக நபர் சார்பிலோ பாதிக்கப்பட்ட தரப்பு சார்பிலோ எந்த கருத்துக்களும் முன் வைக்கப்படாத நிலையில் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிவான் மொஹம்மட் மிஹால் அறிவித்தார்.