ஜொகன்னஸ்பேர்கில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான இறுதி டெஸ்டில் தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்க - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஜொகன்னஸ்பேர்கில் நடைபெற்றது. 

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று  முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 426 ஓட்டங்களை குவித்தது. அம்லா 134 ஓட்டங்களையும், டுமினி 155 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி சார்பில் பிரதீப் மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்று முன்தினம் 2ஆவது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 80 ஓட்டங்களை பெற்றிருந்தது. மெத்யூஸ் 11 ஓட்டங்களுடனும், சந்திமால் 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மெத்யூஸ் மேலும் 8 ஓட்டங்களை பெற்று 19 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். 

சந்திமால் 5 ஓட்டங்களோடு வெளியேறினார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 45.4 ஓவர்களை மாத்திரம் சந்தித்து 131 ஓட்டங்களுக்கு சுருண்டது. 

தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பிளாண்டர், ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களும், பர்னெல் மற்றும் ஒலிவியர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

தென்னாபிரிக்காவை விட இலங்கை அணி முதல் இன்னிங்சில் 295 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால், பாலோ-ஓன் ஆனது. இதனால் இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தென்னாபிரிக்காவின் அதிவேக பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது. 

இதனால் 42.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 177 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பர்னெல் 4 விக்கெட்டும், ஒலிவர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 எனக்கைப்பற்றி இலங்கையை வையிட் வொஷ் செய்தது. 

முதல் இன்னிங்சில் 155 ஓட்டங்களை குவித்த டுமினி ஆட்ட நாயகன் விருதையும், அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் தொடர் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றனர்.