கண்டி போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் 69 ஆவது சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் 3 பேர் திடீரென உயிரிழந்ததையடுத்து, குறித்த சிகிச்சைப் பிரிவில் இருந்த ஏனைய நோயாளர்கள் வெளியேற்றப்பட்டு குறித்த சிகிச்சைப் பிரிவு நேற்று மாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் மூன்று பேர் கடந்த ஞாயிற்றுக் கிழமை திடீரென உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மேற்கொண்ட மருத்துவ சோதனையில்  குறித்த நபர்கள் இன்ஃபுலுவென்சா ஏ எச்1என்1 என்ற நோயினாலேயே  உயிரிழந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து ஏனைய நோயாளர்களுக்கு குறித்த நோய் தொற்றிவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே நேற்று மாலை அவசரமாக குறித்த சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டதாக கண்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

 இதேவேளை குறித்த சிகிச்சைப் பிரிவை சுத்தம் செய்து வெகுவிரைவின் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.