இரண்டாம் உலகப் போரை முதன்முதலாக உலகுக்கு அறிவித்த பெண் பத்திரிகையாளர் க்ளெயார் ஹொலிங்வேர்த் தனது 105வது வயதில் இன்று காலமானார்.

பிரித்தானிய ஊடகங்களில், உலகின் முக்கிய பிரச்சினைகளை கள நிலவரங்களுடன் தொகுத்துத் தரும் நிருபராகப் பணியாற்றிய இவர்தான், போலந்துக்குள் ஹிட்லரின் நாஸிப் படைகள் புகுந்ததை முதன்முதலாக உலகுக்கு அறிவித்தவர். 

இரண்டாம் உலகப் போருக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்ததையடுத்து போலந்துக்குச் சென்றிருந்த க்ளெயார், அங்கிருந்த இராஜாங்க அதிகாரி ஒருவரது காரை எடுத்துக்கொண்டு ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த போலந்துப் பகுதிக்குச் சென்றார்.

அங்கே அவர் யுத்தத் தாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைத் தாங்கிகள் என்பன போலந்துக்குள் ஊடுருவுவதைக் கண்டார். இதை உடனடியாக பிரித்தானிய ஊடகங்களுக்குத் தெரிவிக்க நினைத்த கிளெயார், அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். 

செய்தியை அவர்களுக்குக் கூறியது மட்டுமல்லாமல், தொலைபேசி ரிஸீவரை ஜன்னலுக்கு வெளியே தொங்கவிட்டு கள நிலவரத்தைத் துல்லியமாக அவர்களுக்கு உணர்த்தினார்.

1970 முதல் பீஜிங்கில் பணியாற்றி வந்த கிளெயார், கடந்த சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வருட காலத்தை ஹொங்கொங்கிலேயே கழித்தார்.