(எம்.ஆர்.எம்.வஸீம்)

அம்பந்தோட்டை சம்பவத்துக்கு மக்கள் விடுதலை முன்னணியே மக்களை தூண்டியது. கூட்டு எதிர்க்கட்சியும் அதற்கு உடந்தையாக இருந்தது என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.

மேல்மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

அம்பந்தோட்டை சம்பவம் எமக்கு புதிய விடயம் அல்ல. என்றாலும் நாட்டுக்கு அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது.

இவ்வாறான நிலையில் குறுகிய அரசியல் இலாபத்துக்காக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை உசுப்பேத்திவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் அம்பந்தோட்டையில் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கு கூட்டு எதிர்க்கட்சியே காரணம் என பலரும் தெரிவிக்கின்றபோதும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிரதான சூத்திரதாரியாக இருந்தது மக்கள் விடுதலை முன்னணியாகும்.

அத்துடன் அம்பந்தோட்டையில் 15ஆயிரம் ஏக்கர் காணி வெளிநாட்டுக்கு கொடுக்கப்போவதில்லையென ஜனாதிபதி தெளிவாக தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் அம்பந்தோட்டையில் மேற்கொள்ளப்படும் தொழில் பேட்டை அந்த மாவட்டதுக்கு மட்டும்  மேற்கொள்ளப்படுவதல்ல. அந்த அபிவிருத்தி மொனராகலை, எம்பிலிப்பிடிய வரைக்கும் விருத்தியாகும். அம்பந்தோட்டைக்கு இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் அதிகம் என்றிருந்தால் மேல் மாகாணத்துக்கும் தருமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.