நேபாளத்தில் பூகம்பத்தால் அழிந்த முக்கியமான இரண்டு பௌத்த வழிபாட்டுத் தலங்களை புனருத்தாரணம் செய்து கொடுக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இந்தத் தகவலை நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவர் டபிள்யு.எஸ்.பெரேரா தெரிவித்தார்.

பங்களாதேஷின் புங்கமாட்டியில் உள்ள ராத்தோ மச்சிந்திரநாத் மற்றும் ஸ்வயம்புவில் உள்ள அனந்த குட்டி விகார் ஆகியன 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் தரைமட்டமாகின.

இந்த நிலையில், நேபாளத்தின் துணைப் பிரதமரும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருமான பிமலேந்திரா நிதியை சந்தித்த நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவர் திருமதி.பெரேரா, குறித்த இரண்டு வழிபாட்டுத் தலங்களையும் புனருத்தாரணம் செய்து தர இலங்கை விரும்புவதாகத் தெரிவித்தார். இந்தத் தகவலை நேபாள உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

மேலும் இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 60 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொள்வார் என்றும் திருமதி.பெரேரா அங்கு குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பின்போது, கௌதம புத்தரின் பிறந்த இடமான லும்பினிக்கு விஜயம் செய்ய இலங்கை மக்களை ஊக்குவிக்கவேண்டும் என்று நேபாளத் துணைப் பிரதமர் கேட்டுக்கொண்டதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.