வியட்நாமில் இனிமேல் நோய் தாக்கமற்ற  18 வயது முதல் 60 வயதுவரையான அனைவரும் இரத்ததானம் வழங்க வேண்டுமென அனைத்து அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

வியட்நாமில் குறித்த பராயம் வந்தோர் அனைவரும் நாட்டிலுள்ள அலட்சியப்படுத்தப்பட்ட ரத்த வங்கிகளுக்கு தாங்கள் ரத்த தானம் செய்வதற்கான சட்ட வரைபை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் மற்றும் சட்டவரைபு பேரவை இணைந்து அறிமுகப்படுத்தியிருக்கிறது.

18-இல் இருந்து 60 வயது வரையான ஆரோக்கியமான நபர்கள் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது ரத்ததானம் செய்வதை இந்த சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.

கடந்த வருடம் மாத்திரம் வியட்நாமிலிருந்து சுமார் 4 இலட்சத்து 70 ஆயிரம் லீற்றர் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது. 

இது அந்நாட்டு சனத்தொகையில் 1.2 வீதமாகும். இருப்பினும் நாட்டின் சனத்தொகையில் சுமார் 2 சதவீதமான ரத்ததானம் இருந்தால் மாத்திரமே உலக சுகாதார நிறுவனத்தின் கட்டளைக்கு ஈடாகும்.    

நாடாளுமன்ற அனுமதி இன்னும் வழங்கப்படாத நிலையில், இந்த சட்டத்திற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளதுடன், இது மனித உரிமைகள் மீறலாக அமையும் சட்டமாகும் என்றும் சிலர் வாதிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.