கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்ததையடுத்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் வறட்சிப் பிரதேசமாக - தமிழகத்தை வறண்ட மாநிலமாக - தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சற்று முன்னர் அறிவித்தார். மேலும், இதன் பேரில் அனைத்து விவசாயிகளினதும் நில வரியை இரத்துச் செய்வதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட பதினேழு விவசாயிகளுக்கும் தலா மூன்று இலட்ச ரூபாய் வீதம் வழங்கப்படும் எனவும் அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்புக் குழுக்கள் நேரடியாகச் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் சிபாரிசு செய்யப்பட்டதற்கிணங்கவே முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து மத்திய அரசுக்கு விரைவில் தெரிவிக்கப்படவிருப்பதாகவும், வறட்சிக்கான நிவாரண உதவிகளை அங்கிருந்து பெற்றுத் தர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை, தற்போது அமலில் இருக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக மாற்றவிருப்பதாகவும், நீரேந்துப் பிரதேசங்களைச் சரிசெய்வதற்கான வேலைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும், இதன்மூலம் வறட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கவுள்ளதாகவும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.