நாம் சாப்பிடும் உணவு, செரிமானம் ஆகும்போது கணையத்தில் இருந்து ஏராளமான என்சைம்கள் சுரக்கின்றன. இவை, கணையத்தில் இருந்து ஒரு குழாய் வழியே பயணித்து, சிறுகுடலை அடைகின்றன. பித்தப்பையில் இருந்து வரும் குழாயுடன், கணையத்தில் இருந்து வரும் குழாய் சிறுகுடல் அருகே இணைகிறது. பித்தப்பையில் கல் உருவாகி, அது பித்த நாளத்தை அடைக்கும்போது, கணைய என்சைம் பாதையையும் அடைக்கிறது. கணையத்தில் உருவாகும் என்சைம் செயல்திறன் அற்ற நிலையில் இருக்கும். இது, சிறுகுடலை வந்தடைந்ததும் செயல்திறன் பெறும். அதிக ஆற்றல் கொண்டது என்பதால், இயற்கையாகவே இந்த ஏற்பாடு. பித்தப்பை அடைப்புக் காரணமாக, கணைய என்சைம் செல்வதில் தடை ஏற்படும்போது, குழாயிலேயே இந்த என்சைம் செறிவுத் தன்மை பெறும். இது, மீண்டும் கணையத்துக்குத் திரும்பும்போது, செறிவுடன் இருக்கும். இதுவே, கணைய செல்களை அழித்து, வீக்கம் அடையக் காரணமாக இருக்கிறது.

மது அருந்துதல், புகைத்தல், சில மருந்துகள் எடுத்துக்கொள்வது, இரத்தத்தில் கல்சியம், டிரைகிளசரைட் அளவு அதிகரித்தல், மரபியல், வயிற்றில் அடிபடுதல், புற்றுநோய் என்று வேறு பல காரணங்களாலும் கணைய அழற்சி ஏற்படலாம். கணைய அழற்சியை, உடனடிப் பாதிப்பு, நாட்பட்ட கணைய அழற்சி எனப் பிரிக்கலாம்.

உடனடி கணைய அழற்சியைக் கவனிக்காமல் விட்டால், அவை நாட்பட்ட கணைய அழற்சியாக மாறுகிறது. இதனால், கணையம் மட்டும் அல்லாமல், மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. இது, இதயத்தைப் பாதித்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். நுரையீரலைப் பாதித்து, மூச்சுத்திணறலை உண்டாக்கும். சிறுநீரகத்தைப் பாதித்து, சிறுநீர் வெளியேற்றத்தைக் குறைக்கும். இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்போது, அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும். சிலருக்கு, பார்வைக் கோளாறு ஏற்பட்டு, பார்வை இழப்பு ஏற்படவும் வாய்ப்பும் உள்ளது. மூளையைப் பாதித்து நினைவை இழக்கக்கூடும். மஞ்சள்காமாலையும் வரக்கூடும்.

அதனால் கணைய அழற்சியால் கணையம் சிறிய அளவில் பாதிக்கப்பட்ட உடனே, அதை மருந்துகளால் சரிப்படுத்திக்கொள்ளவேண்டும். நாட்பட்ட கணைய அழற்சிக்கு இதுவரைக்கும் முழுமையாக குணமளிக்கும் மருந்துகள் கண்டறியப்படவில்லை. ஆனால் நிவாரணத்தை அளிக்கும் வகையிலான மருந்துகளே உள்ளன. அதனால் இதனை, வருமுன் காப்பதே நல்லது. கணைய அழற்சிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் சிகிச்சைகளையும், வழிமுறைகளையும் முறையாக பின்பற்றாவிட்டால், மீண்டும் மீண்டும் கணைய அழற்றி ஏற்படுவதுடன்,, புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அத்துடன் ஒரு சிலருக்கு கணையத்தில் கற்கள் தோன்றும், சினைப்பை நீர்க்கட்டிகள் தோன்றும். எனவே, கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

டொக்டர் செல்வகுமார்  M.D.,

தொகுப்பு அனுஷா.