இலங்கையில் உள்ள 20 தமிழக மீனவர்களையும், 118 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதற்கும் மற்றும் ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்துக்காக ரூ.1650 கோடியை விரைவில் ஒதுக்க வேண்டும் என இந்திய பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இந்திய பிரதமருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழக அரசின் தொடர் கோரிக்கையை ஏற்று இலங்கையில் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் விடுவிக்கப்பட்டு இன்னும் முழுமையாக தமிழக கரைக்கு வந்து சேரவில்லை. அதற்கிடையில், பாக் நீரிணையில் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில், மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தில் இருந்து ஒரு விசைப்படகில் சென்ற 6 மீனவர்கள், ராமேஸ்வரம் பகுதியில் இருந்து சென்ற 4 மீனவர்கள் கடந்த வருடம் டிசம்பர் 8 ஆம் திகதி அதிகாலையில் இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் படகுகளுடன் இலங்கையின் காங்கேசன் துறை மற்றும் தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் இவ்வாறு தொடர்ந்து கைது செய்யப்படுவதை தமிழக அரசு மிகுந்த அக்கறையுடன் கவனிக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த 39 சம்பவங்களில் 290 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது 53 படகுகளும் பறிக்கப்பட்டன. இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் 290 மீன வர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் முக்கிய வாழ்வாதாரமான படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை இலங்கை அதிகாரிகள் விடுவிப்பதில்லை. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக பலமுறை எங்கள் கட்சித்தலைவரான ஜெயலலிதா தங்களிடம் தெரிவித்துள்ளார். படகுகள் விடுவிக்கப்படாதது மீனவ சமுதாயத்தினர் மத்தியில் கடும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி பராமரிக்கப்படாததால், இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 118 படகுகளும் சேதமடைந்து வருகின்றன.

இரண்டு வடகிழக்கு பருவமழை காலங்கள் கடந்து விட்டதால், இந்த படகுகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து விட்டன. அதனால்தான், படகுகளை மீட்டு, அவற்றை பயன்படுத்தும் வகையில் பழுதுபார்த்து மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என எங்கள் கட்சித்தலைவர் பலமுறை தங்களிடம் வலியுறுத்தினார்.

பாக் நீரிணைப் பகுதியில் உள்ள இந்தியா- இலங்கை இடையிலான சர்வதேசக் கடல் எல்லையானது வழக்கு இருப்பதால் முடிந்துவிட்ட ஒன்றல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். அதே போல், கடந்த 1974 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்தியா - இலங்கை இடையிலான ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்து, அதில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில், நீண்ட நாள் திட்டமாக ஆழ்கடல் மீன்பிடித்தலை ஊக்குவிக்கும் முயற்சியை தமிழக அரசு எடுத்துள்ளது. இதற்காக ரூ. ஆயிரத்து 650 கோடியை ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் கட்டமைப்புத் திட்டத்துக்காக வழங்க வேண்டும் என ஏற்கெனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரியிருந்தார். அதே கோரிக்கையை நான் கடந்த 19 ஆம் திகதி தங்களிடம் அளித்த மனுவிலும் தெரிவித்துள்ளேன்.

எனவே, தற்போது இலங்கை வசம் உள்ள 20 மீனவர்கள் மற்றும் 118 படகுகளை காலதாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.