ஐஃபோன் விற்பனையில் ஏற்பட்ட மந்த நிலையைக் காரணம் காட்டி, அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக்கின் சம்பளத்தில் 15 சதவீதத்தை அப்பிள் நிர்வாகம் குறைத்துள்ளது.

அப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், கடந்த பதினைந்து வருடங்களுள் ஏற்பட்ட மிகப்பெரிய விற்பனை வீழ்ச்சி கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது. ஒப்பீட்டளவில் குறைவான புதிய வரவுகளே வெளியானமையும், ஐஃபோனின் பிந்திய வரவுகளில் காணப்பட்ட சில பல குறைபாடுகளுமே இந்த விற்பனை வீழ்ச்சிக்குக் காரணம் என அப்பிள் நிர்வாகம் கண்டறிந்தது. 

இதனையடுத்தே டிம் குக்கின் சம்பளப் பணத்தில் 15 சதவீதத்தைப் பிடிப்புச் செய்ய அப்பிள் நிர்வாகம் முடிவு செய்தது. அவருடன் மேலும் சில உயரதிகாரிகளின் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளது.

 இதனால், முந்தைய நிதியாண்டில் 10.3 மில்லியன் டொலர்களை மொத்தச் சம்பளமாகப் பெற்றிருந்த டிம் குக், கடந்த நிதியாண்டில் 8.7 மில்லியன் டொலர்களையே பெற்றுள்ளார்.

கடந்த நிதியாண்டில் அப்பிள் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 8 சதவீதம் - அதாவது, சுமார் 216 பில்லியன் டொலர்கள் - குறைவடைந்திருந்தது. இதனால், மொத்த லாபத்தில் 16 சதவீதமும் - அதாவது, சுமார் 60 பில்லியன் டொலர்கள் - குறைந்தது.

அப்பிள் நிறுவனத்தில், கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாக இது கருதப்படுகிறது.