ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் இலங்கைக்கு எதிராக ஒரு பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சியில் சென்னையின் பிரபல சட்டத்தரணிகள் மற்றும் சட்ட அமைப்புகளின் தலைவர்கள் சிலர் இறங்கவுள்ளனர். இதற்கான சந்திப்பொன்று நாளை மறுதினம் (9) திங்களன்று நடைபெறவுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்தப் பிரேரணையை அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் ராம்ஸே கிளார்க், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.பி.சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட சிலரே முன்னெடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தப் பிரேரணையின் பேரில் பிரதிநிதித்துவம் வகிக்குமாறு இலங்கை மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அமைப்புகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை விவகாரத்தில் சர்வதேச நீதிபதிகள் கலந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை அரசால் அமைக்கப்பட்டிருக்கும் நல்லிணக்கச் செயலணி விடுத்திருக்கும் கோரிக்கையைத் தாம் வரவேற்பதாக ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் ஆணைக்குழுத் தலைவர் ஸெய்த் ராஅத் அல் ஹுசெய்ன் நேற்றுத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.