சிரியா நாட்டில் துருக்கி இராணுவப்படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த 32 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில் கடந்த ஆறாண்டுகளாக அங்குள்ள சில போராளி குழுக்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் தலைமையிலான இராணுவப் படைகள் ஆவேச தாக்குதல் நடத்துகின்றன. இதற்கு உதவியாக ரஷியா நாட்டு போர் விமானங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

சிரியா எல்லையோரம் உள்ள துருக்கி நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளின் மீதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அடிக்கடி ரொக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக சிரியா நாட்டுக்குள் அவர்கள் பதுங்கியுள்ள இடங்களை குறிவைத்து துருக்கி நாட்டு விமானப்படையும் தாக்கி வருகிறது.

அவ்வகையில், சிரியாவின் வடபகுதியில் உள்ள அல்-பாப் மற்றும் உட்பட்ட பகுதிகளில் துருக்கி நாட்டு போர் விமானங்கள் மற்றும் தரைப்படைகள் 21 இடங்களில் நேற்று குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டன.

இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 32 பேர் பலியானதாக துருக்கி அரசு இன்று அறிவித்துள்ளது.