என் அரசியல் பயணத்தை யாரும் தடுக்க முடியாது என்றும், திட்டமிட்டபடி அரசியலுக்கு வருவேன் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீடு சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்களில் ஒரு பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர். தீபாவும் அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறி வருகிறார். தொடர்ந்து, தீபாவுக்கு ஆதரவு பெருகிவருகிறது.

தினமும் அவரது வீட்டிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். நேற்றும் தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், மதுரை, ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் உள்பட 14 மாவட்டங்களில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் வந்திருந்தனர். வழக்கத்தைவிடவும் நேற்று தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் மாடியில் நின்றபடி தீபா தொண்டர்களை நோக்கி, ‘இரட்டை இலை’யை குறிக்கும் வகையில் இரட்டை விரலை காட்டினார். தொண்டர்களும் உற்சாகம் அடைந்து இரட்டை விரலை காண்பித்தனர். பின்னர், தொண்டர்கள் மத்தியில் தீபா சில நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

என் அரசியல் பயணத்தை யாரும் தடுக்க முடியாது. திட்டமிட்டபடி அரசியலுக்கு வருவேன். தொண்டர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். ஜெயலலிதாவின் புகழையும், பெயரையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அவர் செய்த தியாகங்களுக்கு ஈடு இணையே இல்லை. உங்களுக்காக பணியாற்ற நான் காத்திருக்கிறேன்.

இவ்வாறு தீபா பேசினார்.

பின்னர், தொண்டர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்ட தீபா சிரித்தபடியே வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

சற்று நேரத்தில் கீழே வந்த தீபா நிருபர்களிடம் கூறும்போது, “அம்மா (ஜெயலலிதா) விட்டு சென்ற நற்பணியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு செய்து அறிவிப்பேன். அதுவரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தீபா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு எப்போது வருவீர்கள்?

பதில்:- அதை விரைவில் அறிவிப்பேன்.

கேள்வி:- அ.தி.மு.க.வை கைப்பற்றுவீர்களா? அல்லது புதிய கட்சி தொடங்குவீர்களா?.

பதில்:- எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. அதுபோன்ற திட்டமும் இல்லை. தொண்டர்களின் விருப்பத்தையும், கருத்துகளையும் கேட்டு, எனது கருத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டு மிக விரைவில் முடிவு செய்வேன்.

கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவீர்களா?.

பதில்:- தொண்டர்களிடம் கலந்து பேசி முடிவு செய்வேன்.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டிருக்கிறாரே?.

பதில்:- எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி:- முதலமைச்சராகவும் வி.கே.சசிகலா பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறதே?.

பதில்:- முதலமைச்சராக வருவார் என்பது யூகம் தான். உண்மை நிலவரம் வெளிவந்த பிறகு கருத்து தெரிவிக்கிறேன்.

கேள்வி:- அ.தி.மு.க. தலைமை மாறியிருப்பதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?.

பதில்:- நாம் வரலாற்றை பார்த்தோம் என்றால் உண்மை நிலை தெரியும். வருங்காலத்தை மனதில் வைத்து விரைவில் எனது முடிவை அறிவிப்பேன்.

இவ்வாறு தீபா கூறினார்.

தை மாதம் பிறந்ததும், நல்ல முடிவை தீபா அறிவிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் சிலர் தெரிவித்தனர்.