105 வயது முதியவர் ஒருவர் சுமார் 23 கிலோ மீற்றர் தொலைவுக்கு சைக்கிளைச் செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

ரொபர்ட் மார்ச்சண்ட் என்பவர் பிரான்ஸைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 105. வயது முதிர்ந்தாலும் உடல் வலு குறையாத இந்த முன்னாள் தீயணைப்புப் படை வீரர், தனது ஆரோக்கியத்தை வித்தியாசமான முறையில் நிரூபித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஒரு உள்ளக விளையாட்டரங்கில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் சைக்கிளைச் ஆரம்பித்த இவர், ஒரு மணி நேரத்திற்குள் 22.528 கிலோ மீற்றரைக் கடந்து புதிய சாதனை படைத்தார். இந்த வயது எல்லையில் உள்ள ஒருவர் இந்தச் சாதனையைப் படைத்திருப்பது இதுவே முதல்முறை!

சாதனை படைப்பது ஒன்றும் இவருக்குப் புதிதல்ல. தனது நூறாவது வயது பூர்த்தியின்போது, ஒரு மணி நேரத்தினுள் 100 கிலோமீற்றர் சைக்கிளைச் செலுத்தி சாதனை படைத்திருந்தார். அதேபோல், தனது 102வது வயதில் 27 கிலோமீற்றர் தொலைவை ஒரு மணி நேரத்தினுள் சைக்கிளில் சுற்றி வந்து சாதனை படைத்திருந்தார்.

அண்மைய சாதனையை நிறைவு செய்த அவர், சைக்கிளை இன்னும் சற்று வேகமாகச் செலுத்தியிருக்கலாம் என்று தெரிவித்தார்.