போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்கள் தாங்களாகவே திருந்திக்கொள்வதற்கான பொது மன்னிப்புக் காலம் ஒன்றை வழங்கும் திட்டம் அரசிடம் இருப்பதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான ஜனாதிபதி விசேட அதிரடிப் படைப்பிரிவுத் தலைவரும் திட்ட இயக்குனருமான டொக்டர் சமந்த குமார கித்தலவாராச்சி தெரிவித்தார்.

மேற்படி திட்ட நடவடிக்கைகள் குறித்த சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில், “போதைமருந்துப் பாவனையைத் தடுப்பதற்கும், போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்கவும் அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை ஏற்கனவே அடையாளம் கண்டு, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்றிட்டங்களையும் தற்போது செயற்படுத்தியுள்ளோம். மேலும், போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தம்மைத் தாமே திருத்திக்கொள்வதற்கான காலக்கெடு ஒன்றை அறிவிக்கவும் எண்ணியுள்ளோம்.

“போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதற்கான குழுக்களையும் ஏற்கனவே அமைத்துள்ளோம். இவ்வருடம், கிராமப்புறங்களிலும் இதுபோன்ற குழுக்களை அமைக்கவுள்ளோம். போதைப்பொருள் பாவனையில் இருந்து சிறுவர்களையும் இளைஞர் யுவதிகளையும் மீட்க முப்படையினர் பல்வேறு தியாகங்களைச் செய்து வருகின்றனர்.

“குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு எடுத்துவரப்படும் போதைப் பொருட்களைத் தடுக்கும் முயற்சியில் இலங்கை கப்பற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

“தற்போது சட்டவிரோத சிகரெட் கடத்தல்களை முறியடிக்கும் நடவடிக்கை மூலம் சிகரட் பாவனையைக் குறைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம். சிகரெட்டுக்குப் பதிலாக பீடி புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை.”

இவ்வாறு டொக்டர் சமந்த குமார தெரிவித்தார்.