முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கிவரும் வாரச்சந்தையில் பாடசாலைக்கு செல்லும் வயதிலிருக்கும் சிறுவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் உரிய தரப்பினர் இதனை கண்டும் காணாமல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்களால் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கிவரும் வாரச்சந்தையில் பல சிறுவர்கள் வியாபாரிகளால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகிறது. இவ்வாறு சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டவிரோதமானது என்பதை அறிந்தும் சிலர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அதேவைளை, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூட இதனை கண்டும்காணாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்கள் அனைவரும் அறநெறி பாடசாலைகளுக்கு கட்டாயம் செல்லவேண்டும் என்ற கட்டுப்பாடும் சட்டமும் நடைமுறையில் இருக்கின்றபோதும், அவ்வாறு அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாது குறித்த மாணவர்களை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் வியாபாரிகள் மீது குறித்த அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.