தொடர்ச்சியாக சம்பளம் கொடுக்காமை, தமக்கு வாக்களித்த சம்பளத்தொகையை வழங்காமை என்பவற்றிற்காக போராட்டங்களில் குதித்த தொழிலாளர்களுக்கு சவூதிஅரேபியாவில் சிறைவைப்பு மற்றும் கசையடி தண்டணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து சவூதி சென்று வேலை செய்பவர்கள் கடந்த காலங்களில் அவர்களுக்கான சம்பளம் சொன்னபடி கொடுக்கப்படாமையால் பேராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக தண்டித்துள்ளது. 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுள் 50 பேர் வரையானவர்களுக்கு 45 நாட்கள் தொடக்கம் நான்கு மாதங்கள் வரையான சிறை தண்டணையும், சிலருக்கு 300 கசையடிகள் என தண்டனைகள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தகவல் பகிர்ந்துள்ளது.

கச்சா எண்ணெயின் விலையானது வீழ்ச்சி அடைந்தபோது சவூதியில் பொருளாதார சரிவு நிலை ஏற்பட்டது. அச்சூழலிலே குறித்த சம்பளம் பிரச்சினை எழுந்துள்ளது. இருப்பினும் நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்தப்பின்பும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்ந்துள்ளது.

சவூதி பின்லாடின் எனும் கட்டுமான நிறுவனமே தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருந்துள்ளது. குறித்த நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களை எரித்து தமது கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.