முதன்முறையாக வெளியுலகைக் கண்டு பிரமித்த இரட்டைச் சிறுமிகள்

Published By: Devika

04 Jan, 2017 | 10:16 AM
image

தலைகள் ஒட்டிப் பிறந்த இரண்டு சிறுமிகள் தம் வாழ்க்கையில் முதன்முறையாக வெளியுலகுக்கு வந்துள்ளனர்.

தெலங்கானாவில் பிறந்த இந்த இரட்டைச் சகோதரிகளை சுமையாக நினைத்த அவர்களது பெற்றோர், ஹைதராபாத்தின் நிலோஃபர் மருத்துவமனையில் அவர்களை விட்டுச் சென்றனர். குழந்தைகளைப் பொறுப்பெடுத்த மருத்துவமனை நிர்வாகம் அவர்களுக்காக ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தது. போதிய பராமரிப்பு கிடைத்தபோதும் குழந்தைகள் இருவரும் ஒரு அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டி ஏற்பட்டது.

இந்த நிலையில் தான், வாணி, வீணா என்ற இந்த இரட்டைச் சிறுமிகளின் நிலையைக் கருத்திற்கொண்டு தெலங்கானா அரசு அவர்களை சிறுவர் பராமரிப்பு இல்லம் ஒன்றுக்கு மாற்றியிருக்கிறது.

அவர்களை வரவேற்கும் முகமாக குறித்த சிறுவர் பராமரிப்பு இல்ல நிர்வாகம், இருவருக்கும் ஒரே மாதிரியான ஆடைகளை வழங்கியும் கேக் வெட்டியும் கொண்டாடியிருக்கிறது.

பிறந்தது முதல் ஒரு அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்த இந்தச் சிறுமிகள், முதன்முறையாக வெளியுலகைக் கண்டு பிரமித்துப் போயினர். எனினும், பராமரிப்பு இல்லத்தின் சூழலைக் கண்டு ஆரம்பத்தில் பயந்துபோன சிறுமிகள் பெரிய அறை, வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, மீன் தொட்டிகள், சூரிய வெளிச்சம் என, தாம் வாழ்க்கையில் கண்டிராத பலவும் அங்கே இருப்பதால் அங்கே தங்கச் சம்மதித்துள்ளனர்.

ஒட்டிப் பிறந்தபோதும் இருவரது தலைகளும் வெவ்வேறு கோணத்தில் இருப்பதால், தொலைக்காட்சிப் பெட்டியை இருவரும் கண்டுகளிக்க ஏதுவாக ஒரு கண்ணாடியும் வைக்கப்பட்டிருக்கிறது.

மீன் தொட்டிகளுக்கு அருகே நின்று ‘கெக் கெக் கெக்’ என்று வாய் கொள்ளாமல் சிரிக்கும் சிறுமிகள் இருவரும், சூரிய வெளிச்சத்தைக் கண்டு அதிசயப்பட்டதுடன் வெகு நேரம் அந்த இல்லத்தின் தோட்டத்தில் நின்று சூரியக் குளியல் போடுகிறார்கள்.

வாணி, வீணா மட்டுமன்றி, அவர்களை இது நாள் வரை பராமரித்து வந்த மூன்று பெண்களையும், ஆசிரியர் ஒருவரையும் மனவள ஆலோசகர் ஒருவரையும் அந்த இல்லத்துக்கே மாற்றி உத்தரவிட்டிருக்கிறது தெலங்கானா அரசாங்கம்.

சுமார் பத்து வருடங்களாகத் தாம் பராமரித்து வந்த சிறுமிகள் வேறிடத்துக்கு மாற்றப்பட்டதைத் தாங்க முடியவில்லை என்றும் என்றபோதும், அவர்களின் எதிர்கால நலன் கருதி, மன வருத்தத்துடன் இந்த முடிவை ஏற்றுக்கொள்வதாகவும்  நிலோஃபர் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

வீணா, வாணியை சத்திர சிகிச்சை மூலம் பிரித்துவிட முடியும் என்றாலும், வெற்றி வீதம் 20 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதால் மருத்துவர்கள் தயங்குவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right