கருவா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் திகழும் ஜி பி டி சில்வா அன்ட் சன்ஸ் இன்டர்நஷனல், ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வில், 2010 மற்றும் 2011 வருடங்களுக்கான வாசனைத் திரவியங்கள் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதிக்கான இரு விருதுகளை தனதாக்கியிருந்தது.

இந்த நிகழ்வு டிசம்பர் 16 ஆம் திகதி தாமரைத் தடாகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் மிகவும் உயர்ந்த கௌரவிப்புகளில் ஒன்றாக கருதப்படும் ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை முன்னெடுக்கிறது. 27 வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 130 வெற்றியாளர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.

ஜி பி டி சில்வா அன்ட் சன்ஸ் இன்டர்நஷனலின் முகாமைத்துவ பணிப்பாளர் லால் டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,

“எமது அளப்பரிய செயற்பாடுகள் மற்றும் பங்களிப்புகளுக்காக நாம் கௌரவிக்கப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். இதன் மூலமாக பொதியிடல், தரம் மற்றும் வர்த்தக நாம பெறுமதி ஆகியவற்றில் தொடர்ச்சியாக காண்பிக்கும் புத்தாக்கம் மற்றும் அறிவுப் பகிர்வு மற்றும் துறையில் காணப்படும் ஏனையவர்கள் மத்தியில் அனுபவம் கொண்டுள்ளமை ஆகியன உறுதி செய்யப்பட்டுள்ளன” என்றார்.

“இலங்கையின் வாசனைத் திரவியங்கள் மற்றும் நிறுவனத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமுள்ளோம். எதிர் காலத்திலும் எம்மால் இது போன்ற சாதனைகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.

கருவா, மிளகு, ஏலம், கராம்பு, சாதிக்காய், தண்டாயுதம் போன்ற வாசனைத்திரவியங்களுக்கு இலங்கை புகழ்பெற்றதாக திகழ்கிறது. இவற்றின் 90 வீதத்துக்கும் அதிகமானவை ஏற்றுமதி செய்யப்படுவதுடன், இவை பெருமளவில் சுவையூட்டல், வாசனையூட்டல் மற்றும் மருந்தாக்கல் பிரிவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. வாசனைத்திரவியங்கள் சார்ந்த துறையில் பெருமளவு பங்கை கருவா கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2014 இல் வாசனைத்திரவியங்கள் சார்ந்த துறையின் ஏற்றுமதி 260.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. இந்தப் பெறுமதி நடப்பு ஆண்டில் 319.45 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்திருந்ததென ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் வெளியிடப்பட்டிருந்த தரவுகளின் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. கடந்த ஆண்டின் பிரதான சந்தைகளாக இந்தியா, மெக்சிகோ மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்றன அமைந்திருந்தன. இவற்றைத் தொடர்ந்து ஜேர்மனி, பெரு, கொலம்பியா, ஸ்பெய்ன், ஐக்கிய இராஜ்ஜியம், கோதமாலா மற்றும் ஈக்குவடோர் ஆகியன காணப்பட்டன.

தூர நோக்கு சிந்தனையுடைய தொழில் முயற்சியாளரான ஜி பி டி சில்வாவினால் 1955 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்நிறுவனம், 1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி வரை உள்நாட்டு சந்தையில் பெருமளவு ஆதிக்கத்தை செலுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து சிலி நாட்டுக்கான ஏற்றுமதியை முதன் முதலில் ஆரம்பித்ததன் மூலம் சர்வதேச வியாபாரத்தில் கால் பதித்தது. 

இன்றைய காலகட்டத்தில், ஜி பி டி சில்வா அன்ட் சன்ஸ் இன்டர்நஷனல், உலகின் முன்னணி கருவா ஏற்றுமதியாளராக திகழ்வதுடன், வருடா வருடம் உலகளாவிய ரீதியில் காணப்படும் கருவா கேள்வியின் 90 சதவீதத்தை நிவர்த்தி செய்து வருகிறது. மெக்சிகோ, தென் அமெரிக்கா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா போன்ற பிரதான நாடுகளுக்கு தனது ஏற்றுமதிகளை மேற்கொள்கிறது. ஐக்கிய அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சர்வதேச அலுவலகமொன்றையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.

தூய மற்றும் உயர் தரம் வாய்ந்த கருவா ஏற்றுமதியில் முன்னோடியாக திகழும் ஜி பி டி சில்வா அன்ட் இன்டர்நஷனல் நிறுவனம், சாதிக்காய், கராம்பு, மிளகு, உணக்கிய தேங்காய், ஏலம், அத்தியவாசிய எண்ணெய் வகைகள், ஜாதிப்பத்திரி,உலர்ந்த எலுமிச்சை மற்றும் ஏனைய பரந்தளவு தயாரிப்புகள் போன்றன காணப்படுகின்றன. ஏற்றுமதித் துறையில் பெருமளவு பங்களிப்புக்காக அதிகளவு உள்நாட்டு கௌரவிப்புகளை கம்பனி பெற்றுள்ளது. சமூகத்துக்கு மீள வழங்குவது எனும் நம்பிக்கைக்கமைவாக, பல சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளை நாட்டில் முன்னெடுத்த வண்ணமுள்ளது.

இலங்கையில் ஏற்றுமதியாளர்களால் வழங்கப்படும் பங்களிப்பை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள வியாபாரங்களுக்கு மேலும் உயர்ந்த சாதனைகளை நோக்கி பயணிப்பதற்கான சிறந்த அடையாளமாக வளர்ச்சியடைந்துள்ளது.