(வீ. தனபாலசிங்கம் )

இலங்கை மிகவும் முக்­கி­ய­மான அர­சியல் நிகழ்வுப் போக்­கு­களைச் சந்­திக்­கப்­போ­கி­றது. அவை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­னதும்  தலை­மை­யி­லான தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தின் எதிர்­கால இருப்பைத் தீர்­மா­னிக்­கக்­கூ­டி­ய­வை­யாக அமையப்­போ­கின்­றன என்­பதில் சந்­தே­க­மில்லை. 2015 ஆகஸ்டில் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்குப் பிறகே நாட்டின் இரு பிர­தான அர­சியல் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இந்த தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தை அமைத்­தி­ருந்­த­போ­திலும், அந்த வருடம் ஜன­வ­ரியில் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­தை­ய­டுத்து இவ்­விரு கட்­சி­களும் 'நல்­லாட்சி'  என்ற பெயரில் இணைந்து நிர்­வா­கத்தை நடத்தத் தொடங்­கி­யி­ருந்­தன. 

அந்த வகையில் நோக்­கு­கையில் அர­சாங்கம் இரு வரு­டங்­களைப் பூர்த்தி செய்­வ­தற்கு இன்­னமும் ஒரு வாரம் இருக்­கி­றது.புது­வ­ரு­டத்தை முன்­னிட்டு பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்க வெளி­யிட்­டி­ருக்கும் அறிக்­கையில் கடந்த இரு வருட காலத்தில் தங்­க­ளது அர­சாங்கம் நிகழ்த்திக் காட்­டி­யி­ருக்­கக்­கூ­டிய மிகப்­பெ­ரிய சாத­னை­யென்றால் அது ராஜபக் ஷ ஆட்சி கொண்­டு­வந்­தி­ருந்த அர­சி­ய­ல­மைப்­புக்­கான 18 ஆவது திருத்­தத்தை இல்­லா­தொ­ழித்­த­தே­யாகும் என்று குறிப்­பிட்­டி­ருக்­கிறார். நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக ஒருவர் இரு பதவிக் காலங்­க­ளுக்கு மாத்­தி­ரமே ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இருக்­க­மு­டி­யு­மென்று அர­சி­ய­ல­மைப்பில் இருந்த வரை­ய­றையை இல்­லாமல் செய்து ஒருவர் எத்­தனை பத­விக்­கா­லங்­க­ளுக்கும் ஜனா­தி­ப­தி­யாக பத­வியில் இருப்­ப­தற்கு தேர்­தல்­களில் போட்­டி­யிட வகை செய்­வ­தாக அந்த திருத்தம் அமைந்­தி­ருந்­தது. 

2010 செப்­டெம்­பரில் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட அத்­தி­ருத்­தத்தை ரத்துச் செய்யும் ஏற்­பாட்டை உள்­ள­டக்­கி­ய­தாக இன்­றைய அர­சாங்கம் கடந்த வருடம் கொண்­டு­வந்த அர­சி­ய­ல­மைப்­புக்­கான 19ஆவது திருத்தம் அமைந்­தது. நாட்டின் மீது சர்­வ­தி­கா­ரத்தின் நிழலைப் படி­யச்­செய்து ஜன­நா­ய­கத்தை ஒடுக்­கிய அந்த 18 ஆவது  திருத்­தத்தை இல்­லாமல் செய்­ததன் மூல­மாக சர்­வ­தேச சமூ­கத்தின் மத்­தியில் இலங்­கைக்கு மீண்டும் நற்­பெ­யரை வாங்­கிக்­கொ­டுத்து ஏனைய நாடு­க­ளுடன் கேந்­திர முக்­கி­யத்­துவ உற­வு­களை வளர்த்துக் கொள்ள வாய்ப்பைத் தேடிக்­கொ­டுத்­தி­ருப்­ப­தாக பிர­தமர் தனது அறிக்­கையில் பெரு­மைப்­பட்­டி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. 

ஆனால், நாட்­டுக்கு புதி­ய­தொரு அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு கடந்த வரு­டத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட செயன்­மு­றைகள் புதிய வரு­டத்தில் எந்­த­ளவு தூரத்­துக்கு முன்­னோக்கி நக­ரக்­கூ­டி­ய­தாக இருக்கும் என்­ப­தி­லேயே பிர­த­மரின் அந்தப் பெரு­மையின் இலட்­சணம் தங்­கி­யி­ருக்­கி­றது. அர­சி­ய­ல­மைப்புச் சபை­யினால் நிய­மிக்­கப்­பட்ட வழி­காட்டல் குழு நிய­மித்த 6 உப­ கு­ழுக்கள் சமர்ப்­பித்­தி­ருக்கும் அறிக்­கைகள் தொடர்பில் அடுத்­த­வாரம் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடை­ பெ­ற­வி­ருக்­கி­றது. அந்த உப குழுக்­களின் அறிக்­கை­களில் அதுவும் குறிப்­பாக மத்­திய அர­சாங்­கத்­துக்கும் பிராந்­தி­யங்­க­ளுக்கும் இடை­யி­லான உற­வுகள் தொடர்­பாக ஆராய்ந்த உப குழுவின் அறிக்கை தொடர்­பாக மூண்­டி­ருக்கும் சர்ச்­சை­களும் வாதப்­பி­ர­தி­வா­தங்­களும் உத்­தேச புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நியா­ய­மா­ன­தொரு அர­சியல் தீர்­வாக அமை­யக்­கூ­டிய அதி­காரப் பர­வ­லாக்கல் ஏற்­பா­டு­களைச் செய்­வ­தற்கு முன்­னெ­டுக்­கப்­ப­டக்­கூ­டிய செயன்­மு­றைகள் எதிர்­நோக்கப் போகின்ற சவால்­க­ளுக்குக் கட்டியம் கூறி­நிற்­கின்­றன. 

உத்­தேச அர­சி­ய­ல­மைப்பின் பிர­தான நோக்­க­மான நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­முறை ஒழிப்பு தொடர்பில் அர­சாங்­கத்தின் பிர­தான பங்­கா­ளிக்­கட்­சி­க­ளி­டையே கடு­மை­யான முரண்­பா­டுகள் அண்­மைக்­கா­லத்தில் வளர்ந்­தி­ருக்­கின்­றன. ஜனா­தி­பதி ஆட்­சி­முறை ஒழிக்­கப்­ப­டா­மலே போய்­வி­டுமா என்ற கேள்வி இயல்­பா­கவே எழு­கி­றது. அத்­துடன் தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்­புக்கு முக்­கி­ய­மான திருத்­தங்­களைக் கொண்டு வரு­வ­துடன் அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தங்­களை மட்டுப்படுத்திக்­கொள்­வதா அல்­லது புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை முழு­மை­யாகக் கொண்­டு­வ­ரு­வதா என்­பது குறித்­துக்­கூட இணக்­கப்­பாடு காணப்­ப­டாத நிலை­யி­லேயே பாரா­ளு­மன்ற விவாதம் நடை­பெ­ற­வி­ருக்­கி­றது.

அதே­வேளை, தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்­திற்குள் இருக்­கின்ற ஐக்­கிய தேசியக் கட்சி முகா­முக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி முகா­முக்கும் இடையில் ஆட்சி நிரு­வாகச் செயற்­பா­டு­களில் கருத்­தொ­ரு­மிப்பு அணு­கு­மு­றைகளுக்குப் பதி­லாக பெரு­ம­ள­வுக்கு முரண்­பா­டு­களே வளர்ந்­தி­ருக்­கின்­றன.  இந்­தப்­போக்கு அண்­மைய மாதங்­களில் தீவி­ர­ம­டைந்­தி­ருந்­த­தையும்  கண்டோம். . இரு பிர­தான கட்­சி­க­ளுக்கும் இடை­யி­லான இந்த 'சஞ்­ச­ல­மான சக­வாழ்வின் எதிர்­காலம்' குறித்து திட்­ட­வட்­ட­மான கருத்தைக் கூற­மு­டி­யா­த­வர்­க­ளா­கவே அர­சாங்கத் தலை­வர்கள் இருக்­கி­றார்கள். 

மக்­க­ளுக்கு பாத­க­மாக அமை­யக்­கூ­டிய ஐக்­கிய தேசியக் கட்­சியின் யோச­னை­க­ளையும் செயற்­பா­டு­க­ளையும் தாங்கள் எதிர்த்து நின்­ற­தால்தான் தேசிய ஐக்­கிய அர­சாங்கம் சரி­யான பாதையில் இது­வ­ரையில் பய­ணிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது என்று சுதந்­திரக் கட்­சியின் தலை­வர்கள் பகி­ரங்­க­மா­கவே கூறு­கி­றார்கள். அத்­துடன் அர­சாங்­கத்தில் இணைந்து கொள்­ளாமல் முன்னாள் ஜனா­தி­பதி ராஜபக் ஷவுடன் சேர்ந்து நின்று கொண்டு தங்­களை 'கூட்டு எதி­ரணி என்று அழைக்­கின்ற சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் பல பிரச்­சி­னை­களில் எடுக்­கின்ற நிலைப்­பா­டு­களை ஆத­ரிப்­ப­வர்­க­ளாக அர­சாங்­கத்­திற்குள் இருக்­கின்ற சுதந்­திரக் கட்சி அமைச்­சர்­களும் உறுப்­பி­னர்­களும் மாறிக்­கொண்டு வரு­கின்­றார்கள். 

நாள­டைவில் ராஜபக் ஷவுடன் சேர்ந்து செயற்­ப­டக்­கூ­டிய சாத்­தியம் குறித்தும் இவர்­களில் சிலர் வெளிப்­ப­டை­யா­கவே பேசு­கி­றார்கள். இத்­த­கைய போக்கு ஜனா­தி­பதி சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­திர கட்­சிக்கும் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் இடை­யி­லான முரண்­பா­டு­களை மேலும் அதி­க­ரிக்­கவே செய்­கி­றது. 

தேசிய ஐக்­கிய அர­சாங்கம் பத­விக்கு வந்த பிறகு முதற்­த­ட­வை­யாக நாட­ளா­விய ரீதியில் எதிர்­நோக்கப் போகின்ற தேர்­தல்­க­ளாக புதிய வருட முற்­ப­கு­தியில் அல்­லது நடுப்­ப­கு­தியில் நடை­பெறும் என்று எதிர்­பார்க்­கப்­படும் உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் அமை­ய­வி­ருக்­கின்­றன. ஏற்­க­னவே ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கும் கூடு­த­லான கால­மாக ஒத்­தி­வைக்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை இதற்கு மேலும் தாம­தித்தால் அர­சாங்கம் கடு­மை­யான எதிர்ப்­பு­களைச் சந்­திக்க வேண்­டி­யி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

உள்­ளூ­ராட்சி சபை­களின் வட்­டார எல்­லைகள் மீள்­நிர்­ணயம் தொடர்­பி­லான அறிக்­கையைக் கார­ணங்­காட்டி இது­வ­ரையில் தேர்­தல்­களை ஒத்­தி­வைக்க அர­சாங்­கத்­தினால் இய­லு­மாக இருந்­தி­ருந்­தாலும் இனி­மேலும் சாக்குப் போக்­கு­களைச் சொல்ல முடி­யாத நிலை இப்­போது வந்­து­விட்­டது. மேலும் தாம­திப்­ப­தற்­கான பிர­யத்­த­னங்­களில் அர­சாங்கம் ஈடு­ப­டு­வ­தாக கூட்டு எதி­ரணி குற்­றஞ்­சாட்ட ஆரம்­பித்­து­விட்­ட­தையும் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. 

உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் சுதந்­திரக் கட்­சியும் எதி­ரெ­தி­ராகப் போட்­டி­யி­டும்­போது இடையில் ராஜபக் ஷ விசு­வா­சி­களின் புதிய கட்­சியும் தனி­யான அணி­யாக களத்தில் இறங்­கு­வ­தற்­கான சாத்­தியம் இருக்­கி­றது. புதிய கட்சி உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களில் வெளிக்­காட்­டக்­கூ­டிய செல்­வாக்கு சுதந்­திரக் கட்­சிக்குள் ஜனா­தி­பதி சிறி­சே­னவின் தலை­மைத்­து­வத்­துக்கு பெரும் சவாலை தோற்­று­விக்கும் என்­பதை இங்கு நாம் முன்­னரும் கூறி­யி­ருக்­கின்றோம். இத்­த­கைய நிலை­மைகள் முன்னாள் ஜனா­தி­ப­தியும் அவ­ருடன் நிற்­ப­வர்­களும் நாட்டின் அர­சியல் போக்கின் திசையைத் தீர்­மா­னிக்­கக்­கூ­டிய வல்­லமை உள்­ள­வர்­க­ளாக மாறு­வ­தற்­கான வாய்ப்பை ஏற்­ப­டுத்­தலாம்.அர­சாங்­கத்தை புதிய வரு­டத்தில் வீழ்த்­து­ வது குறித்து ராஜபக் ஷ பேசவும் ஆரம்­பித்­தி­ருக்­கிறார். 

இத­னி­டையே ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் அதி­க­ரித்துக் காணப்­படும் முரண்­பா­டு­களின் மிகவும் அண்­மைய வெளிப்­பா­டாக பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்க கொண்­டு­வர விரும்­பு­கின்ற அபி­வி­ருத்தி (விசேட ஏற்­பா­டுகள்) சட்­ட­ மூ­லத்­துக்கு மாகாண சபைகள் காட்­டி­யி­ருக்கும் எதிர்ப்பு அமைந்­தி­ருக்­கி­றது. வெளி­நாட்டு முத­லீ­டுகள் எந்­த­வி­த­மான நிரு­வாகத் தாம­தங்­களும் இல்­லாமல் நாட்­டுக்குள் வரு­வ­தற்கு அங்­கீ­காரம் வழங்கும் செயன்­மு­றை­களைத் துரி­தப்­ப­டுத்­து­வதே இந்த சட்­ட­மூ­லத்தின் நோக்கம். சம்­பந்­தப்­பட்ட அமைச்­சு­க­ளி­ட­மி­ருந்து அனு­ம­தி­க­ளையும் அறிக்­கை­க­ளையும் பெறு­வதில் ஏற்­ப­டக்­ கூ­டிய எந்­த­வி­த­மான தாம­தங்­க­ளையும் பற்றிக் கவ­லைப்­ப­டாமல் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் இலங்­கையில் நம்­பிக்­கை­யுடன் முத­லீடு செய்­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இச்­சட்ட மூலம் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நம்­பிக்­கைக்குப் பெரிதும் பாத்­தி­ர­மா­ன­வ­ரான அபி­வி­ருத்தி தந்­தி­ரோ­பா­யங்கள் மற்றும் சர்­வ­தேச வாணிப அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம விளக்கம் அளித்­தி­ருந்தார். பிர­த­மரின் உத்­த­ரவின் பேரி­லேயே இச் சட்­ட­மூலம் அர­சாங்க வர்த்­த­மா­னி­யிலும் வெளி­யி­டப்­பட்­டது. 

அமைச்­ச­ர­வையில் அந்த சட்ட மூலத்­துக்கு அங்­கீ­கா­ரத்தை வழங்­கிய சுதந்­தி­ரக்­கட்சி அமைச்­சர்கள் இப்­போது வெளியில் அதைக் கடு­மை­யாக எதிர்க்­கி­றார்கள். ராஜபக் ஷவின் கூட்டு எதி­ர­ணி­யினர் கூறு­வ­தைப்­போன்றே இவர்­களும் இச்­சட்ட மூலம் சர்வ வல்­லமை பொருந்­திய 'சூப்பர் அமைச்சு' ஒன்றை உரு­வாக்கும் நோக்­கு­ட­னா­னது என்றும் ஜனா­தி­ப­திக்கு இருக்கும் அதி­கா­ரங்­க­ளுக்கும் கூட பாதிப்­பாக அமை­யக்­கூ­டி­யது என்றும் கருத்­துக்­களை வெளி­யிட்டுக் கொண்­டி­ருப்­ப­துடன் ஒரு­போதும் அதை நிறை­வேற்ற அனு­ம­திக்கப் போவ­தில்லை என்று சூளு­ரைத்­து­மி­ருக்­கி­றார்கள். 

இலங்­கையின் 9 மாகாண சபை­களில் கிழக்கு மாகாண சபை தவிர்ந்த ஏனைய 8 மாகாண சபை­களும் அபி­வி­ருத்தி (விசேட ஏற்­பா­டுகள்) சட்­ட­மூ­லத்தை நிரா­க­ரித்­து­விட்­டன. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிரு­வா­கத்தில் இருக்கும் வட­மா­காண சபையைத் தவிர ஏனைய 7 மாகாண சபை­களும் சுதந்­தி­ரக்­கட்­சியின் கட்­டுப்­பாட்டில் உள்­ள­வை­யாகும். ஜனா­தி­பதி சிறி­சேன இது­வ­ரையில் சட்ட மூலம் குறித்து எந்­த­வி­த­மான அபிப்­பி­ரா­யத்­தையும் வெளி­யி­ட­வில்லை என்­பதால் மாகாண சபை­களின் இந்த நிரா­க­ரிப்­புக்கு பின்­ன­ணியில் அவர் இருப்­ப­தாக சந்­தே­கங்கள் இயல்­பா­கவே கிளம்­பு­கின்­றன. 

எனினும், மாகாண சபைகள் இந்தச் சட்­ட­மூலம் தொடர்பில் கொண்­டி­ருக்கக் கூடிய ஆட்­சே­ப­னை­களைக் கருத்தில் எடுத்து திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு தயா­ரா­யி­ருப்­ப­தா­கவே பிர­மதர் கூறி­யி­ருக்­கிறார். சட்­ட­மூலம் மாகாண சபை­களின் அதி­கா­ரங்­களை அப­க­ரிக்­கக்­கூ­டி­ய­தாக அமை­வதால் தான் சுதந்­தி­ரக்­கட்­சியின் கட்­டுப்­பாட்டில் உள்ள மாகா­ண­ச­பைகள் அதை நிரா­க­ரித்­தி­ருக்­கின்­றன என்று கூற­மு­டி­யாது. அந்த மாகாண சபைகள் அதி­காரப் பர­வ­லாக்­கலில் அக்­கறை கொண்­ட­வை­யல்ல. கட்சி அர­சி­யலின் அடிப்­ப­டை­யி­லேயே அவை சட்­ட­ மூ­லத்தை எதிர்க்­கின்­றன. ராஜபக் ஷ ஆட்­சியில் பசில் ராஜபக் ஷவிடம் கைய­ளிக்­கப்­பட்ட சர்­வ­வல்­ல­மை­யு­ட­னான பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சு குறித்து இந்த மாகாண சபைகள் எந்­த­வி­த­மான எதிர்ப்­பையும் காட்­டாமல்  மௌன­மாக இருந்­தன. இன்று சூப்பர் அமைச்சு குறித்து ஆட்­சேபம் கிளப்பும் சுதந்­தி­ரக்­கட்சி அமைச்­சர்கள் அன்று எவ்­வி­த­ முணு­மு­ணுப்­பு­மின்றி பாரா­ளு­மன்­றத்தில் கைதூக்­கி­ய­வர்­களே. 

இது இவ்­வா­றி­ருக்க, அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்தின் மத்­தியில் எதிர்­நோக்­கப்­போ­கிற ஒரு முக்­கி­ய­மான பிரச்­சினை இருக்­கி­றது. அதா­வது, உள்­நாட்டுப் போரின் இறு­திக்­கட்­டங்­களில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள்,  சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் மற்றும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் இலங்­கையின் பொறுப்­பு­டை­மையை வலி­யு­றுத்தி 2015 அக்­டோ­பரில் ஜெனீ­வாவில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இது வரையில் அர­சாங்கம் எடுத்­தி­ருக்­கக்­கூ­டிய செயற்பாடுகள் குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவிருக்கும் கூட்டத் தொடரில் விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க விருக்கிறார்.

அந்தத் தீர்மானத்தில் மிகவும் முக்கியமான நிபந்தனை வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுநர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கியதாக நீதி விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். ஜனாதிபதி பிரதமர் உட்பட அரசாங்கத் தலைவர்கள் நீதி விசாரணைப் பொறிமுறையில் எந்தவொரு வெளிநாட்டவரின் பங்கேற்புக்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்கள். இத்தனைக்கும் ஜெனீவாவின் தீர்மானத்துக்கு இணை அனுசரணையை இலங்கையும் வழங்கிய நிலையிலேயே இத்தகைய நிலைப்பாடுகளை அவர்கள் எடுத்திருக்கிறார்கள். அதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு பதில் அளிப்பது அரசாங்கத்துக்கு பெரும் சிக்கலாக இருக்கக்கூடும்.  

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன்  ஜனாதிபதி சிறிசேன இலங்கை மீதான போர்க் குற்றத்தீர்மானங்களை ரத்துச் செய்யுமாறு அவரிடம் கேட்கப்போவதாக கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. 

இறுதியாக, தமிழர் அரசியலைப் பொறுத்தவரை, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளில் அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டு, புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளில் நம்பிக்கை கொண்டிருக்கும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் அணுகுமுறைகளை மாற்ற வேண்டிய சூழ்நிலை புதிய வருடத்தில் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகலாம்.