(ஆர்.யசி)

எல்லை மீறும் நக்கர்வுகளை தடுக்கவும் சட்டவிரோத மீன்பிடியை தடுக்கவும் கூட்டுரோந்து பாதுகாப்பு நடவடிக்கையை கையாளவும் கண்காணிக்கவும்  இலங்கை இந்திய அரச பிரதிநிதிகளின்  தலைமையில் இருநாட்டு  மீனவர் பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. 

மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் மாதம்  6 ஆம் திகதி மீண்டும் கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில்  இந்த பேச்சுவார்த்தைகளின் போதும் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் பேச்சுவார்த்தைகளின் போதும்  பிரச்சினைகளுக்கு முழுமையான நிரந்தர தீர்வுகளை காணவும் இணக்கம் கண்டுள்ளனர்.

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலான இரண்டு நாட்டுகளுக்கு இடையிலான   இரண்டாம் கட்ட அரச  தரப்பு பேச்சுவாரத்தை இன்று கொழும்பில் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த  சந்திப்பின் போது மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர  தலைமையில் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம். எ. சுமந்திரன், வடமாகாண அமைச்சர்  டெனிஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவர் செந்தில் தொண்டமான், அமைச்சின் பிரதிநிதிகள், பாதுகாப்பு  செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்திய அரச பிரதிநிதிகள் சார்பில்  இந்திய மீன்வளத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்ட 11 பிரதிநிதிகள்  இந்த பேச்சுவார்த்தை கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கின் மீனவர் பிரச்சினை தொடர்பில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு இந்த இருநாட்டு பேச்சுவாரத்தை முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதலாம் கட்ட பேச்சுவாரத்தையின் தொடர்ச்சியாக இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. எனினும் முதலாம் கட்ட பேச்சுவாரத்தைகள் அதிகாரிகள் மட்ட பேச்சுவாரத்தையாக அமைந்தது. இம்முறை இது இருதரப்பு அரசாங்கம் சார்ந்த முக்கிய பேச்சுவாரத்தையாக முன்னெடுத்தோம். இந்திய மத்திய அரசாங்கத்துடன் சுமுகமாக பேச்சுவாரத்தை நடத்தி மீனவர் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதே நாம் முயற்சிகின்றோம். எனினும் இலங்கை அரசாங்கதின் நடவடிக்கை தொடர்பில் இந்திய அரசாங்கம் மற்றும் மீன்பிடி சங்கங்கள் தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக இலங்கை கடற்படை மூலம் கைதுசெய்யப் படும் மீனவர்களை விடுவித்த போதிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

எனினும்  அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள்  நுழையும் இந்திய படகுகளை நாம் ஆரம்பம் முதற்கொண்டு தடுத்து வைத்து வருகின்றோம் . இப்போது அதிகளவான படகுகள் எமது வசம் உள்ளது. எதிர்காலத்திலும் சட்டவிரோத மீன்பிடி நகர்வுகளுக்கு நாம் இணங்கப்போவதில்லை .  எனினும் இந்திய படகுகளை விடுவிக்க வேண்டுமென இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. ஆரம்பத்தில் நாம் 51 இந்திய படகுகளை விடுதித்தோம். ஏனையவை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. பரிசீலனை செய்து இந்த நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்போம்.

மேலும் இழுவை படகு  மீன்பிடி முறைமையை தடுக்க வேண்டும் என நாம் ஆரம்பம் முதட்கொண்டு இந்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தி வந்துள்ளோம். எனினும் தற்போது இந்திய அரசாங்கம் எமது கோரிக்கையை ஏற்று கொண்டுள்ளது. அதேபோல் இந்த முறையில் படகுகளை பயன்படுத்தாது மாற்று வழிகளை கையாளவும் இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும் மாற்று வழிமுறைகள் இல்லாத காரணத்தினால் சிறிது காலம் தேவைப்படும் என தெரிவிக்கின்றனர்.  குறிப்பாக இலங்கை கடல் எல்லைக்குள் வரவிருந்த 92 படகுகளை இந்திய அரசாங்கம் வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியுள்ளது. 

இந்தியாவுக்கும் இந்த பிரச்சினை பிரதான பிரச்சினையாக உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் இந்தியா இவ்வாறு மீன்பிடி முறைமைகளில் தான் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகின்றனர்.  இலங்கை எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்க அரசாங்கம் முயற்சிக்கும் போது அங்கு மீனவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் நாமும் நன்கு அறிவோம். எனினும் இதை இந்திய அரசங்கம் கையாள வேண்டும்.ஒரே தடவையில்  உடனடியாக பிரச்சினைகளை தீர்க்க முடியாது. எனினும் ஆரம்பத்தில் இருந்த பிரச்சினைகள் இப்போது குறைவடைந்துள்ளது.  எவ்வாறு இருப்பினும் இன்னும் சில ஆண்டுகளில் இந்த மீனவர் பிரச்சினைகளுக்கு இஸ்திரமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம். 

அதேபோல் மீன்படி முறைமையில் நவீன தொழிநுட்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இரு நாட்டு மீன்பிடி படகுகளிலும் இந்த நவீன தொழிநுட்ப கருவிகளை பொருத்தி மீன்பிடியில் ஈடுபடும் முறைமையும் அதேபோல் இரு நாட்டு கடற்படை அதிகாரிகளுக்கு இந்த தொழிநுட்பத்தின் மூலம் படகுகளின் நகர்வுகளை கண்காணிக்கும் நகர்வுகளையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.  பொதுவாக இருநாட்டு கூட்டு ரோந்து நகர்வுகளின் மூலம் மீனவர் எல்லை மீறல்களை தடுக்க முடியும். மேலும் ஏப்ரல் மாதம்  6ஆம் திகதி மீண்டும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெறும். இந்த பேச்சுவார்த்தைகளின் போதும் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் பேச்சுவாரதைகளின் போதும்  பிரச்சினைகளுக்கு முழுமையான நிரந்தர தீர்வுகளை காண முயற்சிகின்றோம். ஒரு பேச்சுவாரதையைல் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.