(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசாங்கம்  விற்பனைசெய்வதற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக ஜனநாயக இடதுசாரி கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்துகூறுகையில்,

அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளது. என்றாலும்  விற்பனை செய்வதற்காக செய்துகொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் தொடர்பாக எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. அத்துடன் ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தொடர்பாக பாராளுமன்றத்துக்கோ  அல்லது அமைச்சரவைக்கோ முன்வைக்கப்படவில்லை. அதனால்  அம்பந்தோட்டை முறைமுக விற்பனை தொடர்பாக அரசாங்கத்துக்குள்ளேயே  பரஸ்பர முரண்பாடான கருத்துக்கள் இருந்து வருகின்றன.

மேலும் துறைமுகத்தை அரசாங்கம் 99வருடங்கள் குத்தகைக்கு வழங்கப்போவதாகவும் 80க்கு 20 என்ற வீகிதாசாரத்தில் வழங்கப்போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  அத்துடன் இந்த துறைமுகத்தையும் துறைமுகத்துக்கு உரித்தான் பூமியையும் குறைந்த மதிப்பீட்டுக்கு விற்பனை செய்யப்போவதாகவும் தெரிவித்து இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்ததன் பிரகாரம்  கூட்டு எதிக்கட்சியாகிய நாங்கள்  தற்போது உயர் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். இதில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அதற்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன் துறைமுக விற்பனை மற்றும் அதற்கு அண்மித்த காணிகள் விற்பனை செய்யப்படுவதன் மூலம் இந்த பிரதேச மக்களும் தங்கள் காணிகள் அபகரிக்கப்படுவதாக தெரிவித்து அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நாங்கள் தாக்கல் செய்துள்ள வழக்கை நீதி மன்றம் ஒருவார காலத்துக்குள் இது தொடர்பாக அடிப்படை கருத்து தெரிவிக்க எங்களுக்கு அழைப்பு விடுக்கும் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன் அரசாங்கம் இவ்வாறு பாரிய நஷ்டத்தை நாட்டுக்கு ஏற்படுதியதன் மூலம் மக்களின் வளங்கள் மற்றும்  நிதி வளங்களுக்கு  பாரிய அநீதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பும் அரசாங்கம் நாட்டின் பெறுமதியான அரச வளங்களை குறைந்த பெறுமதியில் விற்பனை செய்தபோது அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தோம்.அதன்மூலம் நீதிமன்றம் அந்த கொடுக்கல் வாங்கலை தடைசெய்தது.

எனவே அரசாங்கம் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்காக செய்துகொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் தொடர்பான எந்த நிபந்தனைகளையும் இதுவரை வெளிப்படுத்த வில்லை. அத்துடன் மிகவும் குறைந்த மதிப்பீட்டின் அடிப்படையிலேயே அரசாங்கம் துறைமுகத்தையும் அதற்கு அண்மித்த காணிகளையும் விற்பனைசெய்யப்போவதாக தெரிவிக்கப்படும் உண்மைநிலையை அறிந்துகொள்ளும் முகமாகவே வழங்கு தாக்கல் செய்துள்ளோம் என்றார்.