(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா பகுதியில் டிக்கோயா அம்மன் ஆலயம், வனராஜா மேல்பிரிவு மருதவீரன் ஆலயம், வனாராஜா விநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் இன்று அதிகாலை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்கோயா வனராஜா ஆலயத்தில் திருடும் போது அந்தக் காட்சி கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கமராவில் மிகத்தெளிவாக பதிவாகியுள்ளன.

இத்திருட்டுச்சம்பவத்தில் அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த தங்கத்தாலியுடன் கூடிய கொடி சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் பிள்ளையாருக்கு சாத்தப்பட்டிருந்த வெள்ளி ஆபரணமும் திருடப்பட்டுள்ளதாகவும், மருதவீரன் ஆலயத்தில் உண்டியல் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பல திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் இவரை பொலிஸார் தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருடும் போது தொலைபேசியில் உரையாடிக்கொண்டே திருடுவதால் இத்திருட்டுச்சம்பவத்துடன் பலர் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நபர்கள் தொடர்பாக அறிந்திருந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.