சிரியாவில் ஜனாதிபதிக்கு சார்பான இராணுவத்தினருக்கும் சிரிய கிளர்ச்சியாளருக்கும் இடையேயான யுத்த நிறுத்த உடன்படிக்கைளை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. 

சிரியாவில் ஜனாதிபதி ஆசாத்திற்கு சார்பாக சிரிய அரச படைகள் மற்றும் ரஷ்யப் படைகளும் போரிட்டு வரும் நிலையில்  அரசிற்கு எதிரான கூட்டணி படைகளுடன் செயற்படும் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா முன்னெடுத்து வருகின்றது. 

இந்நிலையில் கடந்த செம்டம்பர் மாதம் ரஷ்ய அமெரிக்க ஒத்துழைப்பின் பேரில் ஒரு வாரம் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது.

இந்நிலையில் கடந்தவாரம் ரஷ்ய கூட்டுப் படைகள்  துருக்கிய படை மற்றும் சிரிய அரசப் படைகள் என்பன இணைந்து நடத்திய கடும் தாக்குதலுக்குப் பிறகு கிழக்கு அலெப்போ நகரம் போராட்டக் காரர்களிடமிருந்து மீட்கப்பட்டது. 

தற்போது ஜனாதிபதிக்கு எதிரான கூட்டணி படைகளுடன் ரஷ்யா ஏற்படுத்திய உடன்பாட்டிற்கிணங்க  வெள்ளிக்கிழமை முதல் யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கும் என ரஷ்ய ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த உடன்பாடு தொடர்பாக சிரிய தரப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிரிய தீவிரவாத தாக்குதல் சம்பவங்களால் இதுவரையும் சுமார் 310000 இற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.