ஒளடதங்களின் விலையைக் குறைப்பதுடன் சத்திரசிகிச்சை உபகரணங்களின் விலைகளையும் குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்குத் தேவையான பொறிமுறையைத் தயாரிக்குமாறு தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சிலவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மருத்துவ கருவிகளின் விலைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக கண் வில்லைகளுக்கான விலையைக் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து 6000 ரூபாவிற்கு கண் வில்லைகளைக் கொள்வனவு செய்து, நோயாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அதற்கமைய, கண் வில்லைகளுக்கான விலை நிர்ணயிக்கப்படவுள்ளதோடு, கண் வில்லைகளை 10,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அண்மையில் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தன. எனவே, அதன் ஒரு பகுதியாகவே அறுவைச் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலைகளும் குறைக்கப்படவுள்ளன 

(பா.ருத்ரகுமார்)