இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் கீழ் விடுதலை செய்வதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பை ஊடுறுவும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் தடுப்பு காவலில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

கிரியங்கள்ளிய நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு தேவையான  வள்ளங்கள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் வழங்கல் மற்றும் 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மீனவ சனசமூக நிலையம் அங்குரார்ப்பணம் செய்யும் வைபவத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மீன்பிடிக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறலே பிரதான சவாலாக உள்ளது. 

இதற்கு இறுதித் தீர்வு காண்பதற்காக இராஜதந்திர மட்டத்தில் பேச்சு நடத்தி வருகின்றோம். மேலும் அத்துமீறிய  மீன்பிடியிற்கு பயன் படுத்திய உபகரணங்களை திருப்பி கொடுக்க போவதில்லை எனக் கூறியுள்ளார்.

இரு தரப்பிற்கும் இடையிலான இராஜதந்திர மட்டத்திலான மற்றொரு பேச்சுவார்த்தை ஜனவரி 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறுகிறது. தற்பொழுது 122 இழுவைப்படகுகளுடன், 140 நாட்டுப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவற்றுடன் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் யாவும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. அரசுடமையாக்கப்பட்ட படகுகளையோ உபகரணங்களையோ விடுவிக்க மாட்டோம். கைது செய்யப்பட்டுள்ள சகல இந்திய மீனவர்களையும் சட்டமா அதிபரின் ஆலோசனைப் பிரகாரம் விடுதலை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

இரு நாடுகளுக்குமிடையிலான நற்புறவை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கடற் தொழில் அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.