எம்மில் ஒரு சிலருக்கு கால் பகுதியில் நரம்புகள் முடிச்சு போட்டு புடைத்து இருப்பதைக் கண்டிருக்கிறோம். என்ன? என்று அவரிடம் வினவினால் ‘நரம்பு சுருண்டுவிட்டது’ என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கடந்துவிடுவார்கள். ஆனால் அவர்கள் அவ்வப்போது கால் வலியினால் துடிப்பதைப் பற்றி பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். கால் வலி அதிகமாகும் போது மட்டும் மருத்துவர்களிடம் காட்டி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வர். ஆனால் இதனை அலட்சியப்படுத்தக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் வெரிகோஸ்வெயின் என்ற இந்த நரம்பு சுருள் பாதிப்பு என்பது ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடியவை.

கை கால்கள் மற்றும் உடலின் பல பகுதிகளிலிருந்து அசுத்தமான இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் இரத்த குழாய்களுக்கு வெயின் என்று பெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் அல்லது குழாய்கள் வீக்கமடைதல் அல்லது புடைத்தல் என்று பொருளில் குறிப்பிடுகிறார்கள். சுருக்கமாக இதயத்திற்கு அசுத்தமான இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த குழாய்கள் வீக்கமடைவதற்கு தான் வெரிகோஸ் வெயின் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசையாமல் நின்றபடியே பணியாற்றுவது, கால்களை தொங்கப்போட்டுக்கொண்டு நீண்ட நேரம் அமர்ந்த நிலையிலேயே வேலை செய்வது, இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருப்பது போன்ற சில காரணங்களால் இவை ஏற்படுகின்றன.

இதற்கான சிகிச்சை என்று பார்த்தோமேயானால் சுறுசுறுப்பாக இயங்குவது தான் இதற்கான சிகிச்சை என்று சொல்லலாம். சுறுசுறுப்பாக இயங்குவதன் மூலம் இவை வராமலேயே தடுக்க இயலும். வந்துவிட்டால் மருத்துவர்களை சந்திக்கவேண்டும். அவர்கள் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து microsclerotheraphy. laser surgery.endovenous ablation theraphy.endoscopic vein surgery. ambulatory phlebectomy.vein stripping and ligation என பலவித சிகிச்சைகளைப் பற்றி எடுத்துரைத்து, இதில் எமக்கு பொருத்தமானவற்றி பரிந்துரைப்பார்.அதனை மேற்கொண்டு குணமடையலாம்.

ஒரு சிலர் இதற்கு மாற்றாக அக்குபஞ்சர் மருத்துவத்தை நாடுகிறார்கள். அவர்கள் இவ்வித பிரச்சினைக்கு லீச் தெரபி என்ற ஒரு சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். லீச் என்பது ஒரு வகையான அட்டைப்பூச்சி. இவைமனித உடலிலிருக்கும் கெட்ட இரத்தத்தை உறிஞ்சி உணவாக எடுத்துக் கொள்பவை என்பதால் இருபது முதல் முப்பது அமர்வுகளில் இத்தகைய அட்டைப் பூச்சியைக் கொண்டு எம்மிடமுள்ள அசுத்தமான இரத்தத்தை அப்புறப்படுத்துகிறார்கள். அதன்பின் இரத்த ஓட்டத்தை சீராக்க அக்குபுள்ளிகள் கொண்ட ஒரு இயந்திரத்தின் மீது மூன்று நிமிட நின்று அந்த சிகிச்சையையும் செய்து கொண்டால் வெரிகோஸிஸ் வெயின் என்ற பிரச்சினையிலிருந்து முழுமையாக மீள முடியும்.