வவுனியாவில் கடந்த சில தினங்களாக முகநூல் மற்றும் இணையத்தளங்களில்  வவுனியாவில் செயற்படும் அரசியல் கட்சி ஒன்றினை இலக்குவைத்து கட்சியின் செயலாளர் மீதும் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் மீதும் அவதூறு செய்திகளை பரப்பி வந்த நபர் ஒருவர் இன்று பொலிஸாரிடம் சிக்கினார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

கடந்த சில  தினங்களாக மின்னஞ்சல் ஊடாக நூற்றிக்கு மேற்பட்டவர்களுக்கு குறித்த அரசியல் கட்சியினை அவதூறு படுத்தியும், குறித்த கட்சியின் செயற்பாடுகளை இழிவு படுத்தியும் கட்சியின் தலைவரின் படத்துடன் செய்தி வெளியிட்ட நபர் ஒருவர் மீது இன்று காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் கட்சியின் வவுனியா உறுப்பினர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த சந்தேக நபரை விசாரணைக்கு அழைத்த பொலிசார் முறைப்பாடுகளை ஏற்றுக் கொண்டதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குறித்த சந்தேக நபரை முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கடந்த சில தினங்களாக குறித்த அரசியல் கட்சியையும் வவுனியாவில் உள்ள தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள் மீதும் அவதூறு படுத்தியும் உண்மைக்கு புறம்பாகவும் செய்தி வெளியிட்டதுடன் பல அசம்பாவிதங்களுக்கும் தூண்டுதலாக இருந்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அக்கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாகவே சந்தேக நபரிடம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையின் போது குறித்த சந்தேக நபர் பொலிஸாரிடம்,

தனது மின்னஞ்சலை வேறு ஒரு நபர் கையகப்படுத்தி  இவ்வாறு கட்சியை அவதூறு பரப்பியதாக தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றில் பணிபுரியுமிவர் பலரின் தூண்டுதலின் பேரிலே பல அவதூறு செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகிப்பதுடன் இவருக்கு பின்னணியில் இருந்து இயக்குபவர்களையும் இனங்கான வேண்டுமென பொலிசாரிடம் கோரியுள்ளனர்.