முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

சற்றுமுன்னர் முல்லைத்தீவு வற்றாபளை பகுதியிலிருந்து முள்ளியவளைநோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர்மீது பின்னால் வந்த கேப்பாபுலவு இராணுவமுகாமினை சேர்ந்த இராணுவ நோயாளர் காவுவண்டி மோதியத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பலியானவர் அதே இடத்தை சேர்ந்த ஆறுபிள்ளைகளின் தந்தையான சூரிப்பிள்ளை கந்தப்பிள்ளை 75 ஆவார்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் சற்றுநேரம் பதற்றமான சூழல்காணப்பட்டதாகவும். விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து இராணுவ அம்பியுலன்ஸ் உடனடியாக இராணுவத்தினரால் அகற்றப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உடனடியாக குறித்த இடத்திற்கு வந்த முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மக்களுடன் கலந்துரையாடி விபத்து தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெறும் என உறுதியளித்த பின்னரே சடலம் அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.