ஒருவருக்கு சிறுநீரகத்தை ஒட்டிய இடுப்பு பகுதியில் தொடர்ந்து தாங்க முடியாத அளவு வலியிருந்தால் அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகி இருக்கலாம். இந்த கற்கள் மூலம் பொதுவாக ஆண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.  

ஒருவரின் உடலில் அதிக அளவில் வியர்வை வெளியாகும் போது, சிறுநீரின் அளவு குறைந்து அடர்த்தியாகிறது. இதுவே நாளடைவில் கற்களாக மாறுகிறது. மேலும் நீண்ட நேரம் சிறுநீரை அடக்குவதாலும், குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதாலும், சிறுநீர்ப் பாதையில் தொற்று போன்ற காரணத்தினாலும் சிறுநீரகக் கற்கள் உருவாக்கும். இந்த கல், 2 முதல் 3 செ. மீ. அளவில் இருந்தால் அதனை மருந்து மூலம் கரைத்து வெளியேற்றி விடலாம். அதற்கு மேல் இருந்தால் அதனை சத்திர சிகிச்சை முறையில் தான் வெளியேற்ற முடியும். ஆனால் இப்போது அதற்கு பதிலாக நவீன முறையில் சத்திர சிகிச்சை செய்யாமல், எவ்வித வலியும் இல்லாமல்  லித்தோ டிரிப்ஸி என்ற சிகிச்சை மூலம் கற்களை வெளியேற்றலாம்.

இவ்வித சிகிச்சையின் போது, நோயாளியின் வயிற்றுப்பகுதியில் தண்ணீர் நிரப்பிய பையால் அழுத்தப்படும். இதன் முலம் "மெக்கானிக்கல் அலைகள்" அனுப்பப்படுகின்றன. இந்த அலைகள் ஒரு நிமிடத்திற்கு 60 முறை உண்டாகும். ஒருவரின் உடலில் உள்ள கல்லின் அளவைப் பொறுத்து ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வீதம், 2 அல்லது 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் கற்களை கரைத்து விடலாம். உடலில் உள்ள கற்கள் நொறுங்கி வெளியேறுவது இதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் கணனி திரையின் மூலம் கண்காணிக்கப்படும். இவ்வித சிகிச்சையின் போது நோயாளிகள் வைத்தியாசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியதில்லை. 

ஒரு சிலருக்கு ஒருமுறை கற்கள் உருவானால் 80 சதவீதம் மறுபடியும் அந்த கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. எனவே கற்கள் உருவாவதை தடுக்க டொக்டரின் ஆலோசனை பெற்று, ஸ்கேன் பரிசோதனை செய்து கொண்டு ஆரம்பத்திலேயே அதனை தடுத்துக் கொள்ளவேண்டும்.

டொக்டர்  ராஜேந்திரன் M.D.,

தொகுப்பு அனுஷா. 

தகவல் : சென்னை அலுவலகம்