லிபியா பயணிகள் விமானம் 118 பேருடன் மால்டாவில் சற்றுமுன்னர் கட்டாயமாகத் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அது கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மால்டா பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஏயார்பஸ் ஏ 320 விமானம், லிபியாவுக்குள் பறந்து கொண்டிருந்தது. ஆப்ரிகியா ஏயார்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான குறித்த விமானம், நடுவழியில் திசை மாற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தை குண்டு வைத்துத் தகர்த்து விடுவதாக மிரட்டி, இரண்டு கடத்தல்காரர்கள் அந்த விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அந்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் சட்டவிரோதமாக இடையூறு விளைவிக்ககூடிய நடவடிக்கைகள் ஏற்பட்டிருப்பதாக மால்டா சர்வதேச விமான நிலையம், டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் அந்நாட்டில் அவசர கால படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் பெருமளவிலான சிறப்பு படையினரைக் காண முடிவதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் இன்று மால்டாவுக்கான சில விமானங்கள் இத்தாலியத் தீவான சிசிலிக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன.