(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) 

சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றியவர் மோட்டார் சைக்கிளில் சென்ற வேளையில் எதிரே வந்த வாகனத்துடன் மோதியதில் சம்பவ இடத்திலே மரணமானார்.

இவ் சம்பவம் நேற்று பிற்பகல் மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் வங்காலை வீதியில் இடம்பெற்றுள்ளது.

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்த மன்னார் வங்காலையைச் சேர்ந்த சுமன் என அழைக்கப்படும் என்.ஸ்ரான்லி போல் லெம்பேட் (வயது 33) என்பவர் நேற்று நானாட்டான் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து விட்டு பிற்பகல் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இவ் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நானாட்டான் வங்காலை வீதியில் இவர் மோட்டர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபொழுது அதே வீதியில் இவருக்கு எதிரே வந்த வாகனம் மோதியதில் சமுர்த்தி உத்தியோகத்தர் பலியானார்.

இறந்தவர் இரு குழந்தைகளுக்கு தந்தை. இறந்தவரின் சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து வரப்பட்டதுடன் இவ் மரணம் தொடர்பாக முருங்கன் பொலிசார் வாகன சாரதியை கைது செய்து விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.