பருத்தித்துறை கடலில் மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவரின் சடலம் நேற்று காலை வெளிச்சவீட்டுக்கு அருகில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை முனையைச் சேர்ந்த அன்ரன் ஜோர்ஸ் சந்திரசேகரம் (வயது 38) என்பவரின் சடலமே கரை ஒதுங்கியுள்ளது.

பருத்தித்துறை பொலிஸாரின் உதவியுடன் சடலத்தைப் பார்வையிட்ட பருத்தித்துறை பதில் நீதிவான் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு பருத்தித்துறைக் கடலில் கடும் காற்று மற்றும் கடற்கொந்தளிப்பினால் படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் சென்ற மூன்று மீனவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் மற்றைய இருவரும் கரையை அடைந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் காணாமல் போனவரே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.