(ஆர்.யசி)

புதிய அரசியல் அமைப்பின் மூலம் பிரேரிக்கப்பட்ட தேர்தல் முறைமைக்கு அமைவாகவே அடுத்த சகல தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும். அதற்கான ஆதரவை பாராளுமன்ற பிரதிதித்துவ கட்சிகள் அனைத்தும் வழங்கியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. எல்லை நிர்ணய ஆணைக்குழு காலம் தாமதிக்காது செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டது.

அடுத்த ஆண்டு மார்ச்  மாதத்தினுள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை வினவியபோதே கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த காலத்தில் போன்று கலப்பு முறைமை  தேர்தலை நடத்தாது மாற்று நடவடிக்கை ஒன்றை கையாள வேண்டும் என்ற அடிப்படியில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். அதேபோல் எல்லை நிர்ணயம் முறையாக இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை சகல கட்சிகளினாலும் முன்வைக்கப்பட்டது.அதற்கு அமைய சுயாதின எல்லை நிர்ணய ஆணைக்குழு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது. எனினும் சுயாதின எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயற்பாடுகள் காலதாமதம் இன்றி சரியாக உரிய நேரத்தில் முன்வைக்கப்பட வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட வேண்டும். ஆகவே இந்த நடவடிக்கைகளில்துரித கதி இருப்பின் மாத்திரமே தேர்தலை சரியாக நடத்த முடியும் என்றார்.