படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு ஒன்று தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லசந்த விக்கிரமதுங்க இலங்கை அரசுக்கெதிராகவும் பல அரசியல்வாதிகள் தொடர்பாகவும் ஆயுதக் குழுக்கள் தொடர்பாகவும் மிக நீண்டகாலமாக மிகக் கடுமையான கட்டுரைகளை "சண்டே லீடர்', மோர்னிங் லீடர் மற்றும் ஞாயிறு சிங்களப் பத்திரிகையான "இருதின' ஆகியற்றில்  வெளியிட்டு வந்ததால் இவர் பல ஆண்டுகளாக்க தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வந்திருந்தார்.

இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி தெஹிவளை, அத்திட்டய பேக்கரி சந்தியில் வைத்து லசந்த விக்கிரமதுங்க இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார். 

இந்தப் படுகொலை இடம்பெற்று 8 வருடங்கள் கடந்த பின்னர், இவ்வாறானதொரு ஒலிப்பதிவு அம்பலமாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உரையாடல் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக இருவருக்கும் இடையிலான உரையாடல் மூலம் தெரியவருகின்றது.

லசந்த விக்கிரமதுங்க - மஹிந்த ராஜபக்ஷ இடையிலான தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு பின்வருமாறு,

 மஹிந்த : ஹலோ

லசந்த : ஹலோ… ஆ எப்படி..? என்ன நடக்குது.?

மஹிந்த : ஒன்றும் இல்லை… இப்போ பிரச்சினை முடிந்து விட்டது தானே..?

லசந்த : இதற்கு பின்னார் என்ன நடக்கும்.?

மஹிந்த : இப்போது இது இவ்வாறே முன்னோக்கி செயற்படும். இதன் பின்னர் என்ன நடக்கும் என்பதே இனி தான் பார்க்க வேண்டும்.

லசந்த : வடமத்திய மாகாணத்துக்கான தேர்தல் எப்போது நடக்கும்?

மஹிந்த : இன்னும் முடிவு செய்யவில்லை. பணமும் தேவை தானே. பணமும் தேடி கொடுக்க வேண்டும் தானே. 

லசந்த : நாட்டில் பொருளாதார பிரச்சினை தலை தூக்கியுள்ளது. அதற்கு தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும். இன்று எண்ணெயின் விலை 120க்கு போய் உள்ளது. இன்னும் ஒரிரு மாதங்களில் 150 ஆக அதிகரிக்கும். 

மஹிந்த : இது 200க்கு செல்லும். இதனால் வரி அறவிட முடியாது உள்ளது.

லசந்த : கிராம புறங்களில் மக்கள் விவசாயத்தில் ஈடுப்படுவதனால் பரவாயில்லை. நகரங்களில் வாழும் மக்களின் பொருளாதார நிலை பாதிக்கக்கூடும். இதேவேளை தொழிற்சாலைகளின் நிலை மேலும் பாதிக்கக்கூடும். எண்ணெய் விலை அதிகரிக்கும் போது மின்சாரம் என்பனவற்றின் விலை அதிகரிக்கும் தானே

மஹிந்த : ம்ம்ம்…

லசந்த : இன்னொரு பக்கத்தை சொல்ல வேண்டும். அது உங்களுக்கு பிடிக்குமோ தெரியவில்லை. அடிமட்ட பிரதேசங்களையும் கொஞ்சம் கவனியுங்கள். உங்களுக்கு உதவிய ஒருவருக்கு அவர் சாகும் வரை நீங்கள் பாதுகாப்பு கொடுப்பீர்கள். அது உங்களுடைய ஒரு நல்ல குணம். ஆனால், ஜனாதிபதி என்ற வகையில் அவர்களை விலகி இருக்க சொல்லுங்கள்.

மஹிந்த : எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை. நான் சிலரை வெளிப்படையாக சொல்வதும் உண்டு. ஆனால் அவர்கள் கேட்பதில்லை.

லசந்த : அவர்களின் பதவியை அவ்வாறே வைத்துக் கொண்டு ஒதுங்கியிருக்குமாறு சொல்லலாம் தானே.?

மஹிந்த : இது தொடர்பாக முறைப்பாடு செய்ய வேண்டாம். 

லசந்த : நாங்கள் கேள்வி தொடுத்து இருந்தோம். ஒரு வருடத்துக்கு முன்னர், அது குறித்து எழுதியிருந்தேன் 

மஹிந்த : அவர் எல்லா வேளையும் தெரியாமல் முடித்துள்ளார்.

லசந்த : லலிதா

மஹிந்த : இருக்கலாம். இல்லை வேறு யாராவது… இன்னும் அவர் வெளிநாட்டில்

லசந்த : எல்லாத்தையும் எழுதினால் பிரச்சினை. பல்வேறு வழிகளில் செய்தி அனுப்பினோம் ஆனால் அவர் கண்டுக்கொள்ளவில்லை. இதை சொல்ல வேண்டாம். அவர் இதனை வேறு விதமாக நினைத்துள்ளார்.

மேலும், சரத் பொன்சேகா, தவறான பிரசாரமொன்றை மேற்கொண்டு வருகின்றார். எனக்கு பெயர் குறிப்பிடாத நபரொருவர் தகவல் அனுப்பியிருந்தார். எனினும் தகவல் வழங்கியது, இராணுவத்தினர் அல்ல 

மஹிந்த : நான் கேட்டும் அவர்  சொல்லவில்லை.

லசந்த : நான் இதற்கு முன்னர் எழுதியுள்ளேன்.

மஹிந்த : ஒலி தடை செய்யப்பட்டுள்ளது

லசந்த : ஒலி தடை செய்யப்பட்டுள்ளது

மஹிந்த : எமக்கு ஒவ்வொரு நிறுவனத்திற்கும்

லசந்த : எழுத முன்னர் சொல்லும் போது எதுவும் சொல்ல வில்லை. ஆனால் எழுதிய பின்னர் பல கேள்வியை எழுப்பினர். எல்லா வேளைகளிலும் என்னால் அவரோடு தொடர்பு கொண்டு கேட்க முடியாது. சில வேளைகளில் மற்றைய ஊடகவியாலலரை தொடர்பு கொள்ள சொல்வேன்.

மஹிந்த : நீங்கள் பேசினால் பதில் சொல்வார். இவ்வாறு சொல்வதால் எமக்கும் நன்று. 

லசந்த :  ஒலி தடை செய்யப்பட்டுள்ளது

மஹிந்த : சபாபதி பெரிய வர்த்தகர் ஆச்சே

லசந்த : ரணில் ஆட்சியில் இருந்த போதிலும் நாம் எழுதினோம். ஒருவரை உதாரணமாக சொன்னால் மற்றவர்கள் திருந்துவார்கள் தானே.

மஹிந்த : முதலில் ஒரு சின்ன நபரை பிடித்து தாங்க. இதனை எழுத வேண்டாம். நாம் சந்தித்து கலந்துரையாடுவோமா.? 

லசந்த : ஆம். சந்திந்து கலந்துரையாடுவோம்.

மஹிந்த : அது சிறைச்சாலை மாதிரி தான்

லசந்த : அரசியலை ஒரு பக்கமாக வைத்து விட்டு இதை செய்து முடியுங்கள்.

மஹிந்த : நான் தயார். இதை முடிஞ்ச பிறகு…. சந்திரிக்கா மாதிரி தொங்கிக் கொண்டு இருக்க மாட்டேன்.

லசந்த : நாட்டுக்கு எந்த வகையிலாவது நல்லது செய்யவேண்டும். இரு தரப்பும் இணைந்து அரசியல் கோபதாபங்களைவிட்டு இணைந்து செயற்பட வேண்டும்.

மஹிந்த : ம்ம்

லசந்த : நன்றி. இரவு வணக்கம்

மஹிந்த : நன்றி.

மேலும், இந்த ஒலிநாடாவில் மஹிந்த ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்ததாக கூறுவதும் பதிவாகியுள்ளது. 

இவ்விருவரின் கலந்துரையாடலை, யார் பதிவு செய்தார்கள் என்பது தெரியாதுள்ள நிலையில், அதைப் பதிவு செய்தவர், அந்த ஒலிப்பதிவை செம்மைப்படுத்தியுள்ளமை தெளிவாகிறது. 

இதேவேளை, இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவுத் தலைவர் ரொஹான் வெலிவிட்ட, இந்த ஒலிப்பதிவு தொடர்பான உண்மைத்தன்மை குறித்து கண்டறிவது அவசியம் என தெரிவித்துள்ளார்.