(ஆர்.ராம்)

அரிசி விநியோகத்தை சீராகவும் தாராளமாகவும் சந்தையில் பேணும் வகையில் புதிய அரிசியை லங்கா ச.தொ.ச.நிறுவனம் ஊடாக மக்களுக்கு அளிப்பதற்கு உடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை மட்டத்திலான குழு கடந்த 14 ஆம் திகதி கூடி போது 250,000 மெட்ரிக் தொன் அளவிலான புதிய அரிசியினை இறக்குமதி செய்து சந்தையில் இருக்கும் கேள்வியை நிரப்புவதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.

இக்குழவின்; முடிவுக்கிணங்க 10,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கும் 20,000 மெட்ரிக் தொன் (வெள்ளை மற்றும் நாடு) நெல்லை நெற்சந்தைப்படுத்தும் திணைக்களத்திலிருந்து கொள்வனவு செய்து, அதனை அரிசியாக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொள்வனவு செய்யப்படும் நெல்லை தனியார் ஆலைகள் மற்றும் அரச ஆலைகள் ஊடாக குற்றி அதனை அரிசியாக்கி லங்கா சதொச கிளைகள் மூலம் 78 ரூபாவுக்கு நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் பணிப்புரைக்கிணங்க இந்த செயற்பாடுகளை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் இன்று முதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில்  எதிர்வருகின்ற நாட்களில் லங்கா சதொசவினூடாக அரிசி பாவனைக்கு விடப்படுமெனவும் இதன் மூலம் புத்தாண்டு தினங்களில் அரிசியை தாராளமாக நுகர்வோர் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியூர்தீன் மேலும் தெரிவித்துள்ளார்.