நாம் ஒரு - குறுக்கு கலாச்சாரம் (Naam Oru - Cross Culture) எனும் தனி இசை ஆல்பத்தின் மூலம் தன் இசைப்பணியை  ஆரம்பித்தவரே தற்போது புகழ்பெற்ற, எல்லோராலும் ADK என அழைக்கப்படும் ஆரியன் தினேஷ் கனகரட்னம் ஆவார். இவர் 2012இல் அகாடமி மற்றும் கிராமிய விருதுளின் சொந்தக்காரரான இசைப்புயல் ஏ.ர். ரஹ்மான் உடன் இணைந்து பணியாற்றிய முதல் இலங்கை  ராப் இசைக்கலைஞர் என்ற பெருமைக்குரியவர். இந்தியாவில் தலைசிறந்த திரைப்பட இயக்குனர்களுள் ஒருவரான மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் உருவான 'கடல்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மகுடி' பாடலின் பாடலாசிரியர் மட்டுமல்லாது கிராமிய விருது வென்ற பாடகி தன்விஷா மற்றும் சின்மயி ஆகியோருடன் இணைந்து அப்பாடலை பாடியுள்ளார் ADK.

ADK, 2012 இல் பாடகி சின்மயி உடன் இணைந்து "மகுடி" பாடலை ஏ.ர். ரஹ்மானின் "தாய் மண்ணே வணக்கம்" இசை நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை பெற்றார்.  இவர் இரண்டாவது முறையாக ஏ.ர். ரஹ்மானுடன் இணைந்து பாடிய "காரா ஆட்டக்கார" பாடல் யூட்யூப்  இல்  (YouTube) 4 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவின் மாபெரும் நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் "லிங்கா" திரைப்படத்தில் இடம்பெற்ற "ஓ நண்பா" பாடலில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமையும் ADK ஐ சாரும். 

ஏறத்தாழ 3 வருடங்களின் பின் ஏ.ர். ரஹ்மான் தற்போது தனது இசைநிகழ்ச்சியில் ADK ஐ இணைத்துக்கொண்டுள்ளார். "நெஞ்சே எழு" என பெயரிடப்பட்டுள்ள இவ் இசைநிகழ்ச்சியானது சென்னை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களின் மீட்புப்பணிக்காக நிதி திரட்டும் பொருட்டு இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள 3 மாநகரங்களில் இடம்பெறவுள்ளது. ஏ.ர். ரஹ்மானின் அழைப்பின் பேரில் ADK உட்பட மேலும் பல பாடகர்கள் பங்கேற்கவுள்ள இவ் இசைநிகழ்ச்சியானது ஜனவரி 16ம் திகதி சென்னையிலும், ஜனவரி 23ம் திகதி கோயமுத்தூரிலும் மற்றும் ஜனவரி 31ம் திகதி மதுரையிலும் இடம்பெறவுள்ளது. 

இவ் இசைநிகழ்ச்சியில் ADK, தான் ஏ.ர். ரஹ்மானுடன் இணைந்து பணிபுரிந்த, மக்கள் வரவேற்பை பெற்ற பாடல்களை பாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்தேகத்துக்கிடமின்றி இது இலங்கையை சேர்ந்த ஏனைய சுயாதின இசைக்கலைஞர்களுக்கும் பெருமையானதும் உத்வேகத்தை தூண்டக்கூடியதுமான ஒரு தருணம் ஆகும். 

தன் இசைப்பயணத்தை மிக எளிமையான முறையில் தொடங்கிய ஆரியன் தினேஷ் கனகரட்னம் தற்போது இசை உலகில் பெரும் சாதனைகளை புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ADK Fan Page: https://www.facebook.com/AaryanADK