தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வைப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதி அளித்தவர்கள் இன்று மௌனித்துப் போயுள்ளனர். இந்நிலையில் கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமான இணக்கப்பாடுகளைப் பற்றிப் பேச முடியாத நிலையில் உள்ளேன். இருப்பினும் எனது மக்களின் தேவை அறிந்து செயற்படுவேன் என்று மலையக புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மாத்தளை பிட்டகந்த பகுதியில் மண்சரிவு அனர்த்தத்துக்கு இலக்காகும் பகுதிகள் என இனங்காணப்பட்ட பகுதிகளிலிருந்து 2012 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்காக அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத்திட்டத்தின் மூலம் மாத்தளை பிட்டகந்த தம்பலகல தோட்டத்தில் தலா ஏழு பேர்ச்  காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 20 வீடுகளையும் திறந்து வைக்கும் வைபவம் இன்று  காலை  இடம்பெற்ற பின் நடந்த கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், 
 
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக பெற்றுத் தருவேன் என்று வீராவேசம் பேசியவர்கள் எல்லாம் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று தேடவேண்டியுள்ளது. தொழிலாளரின் தீபாவளி முற்பணம் தொடர்பில் நாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை காரணமாக திறைசேரியின் மூலம் இதற்கு கணிசமான தொகை பெற்றுத்தரப்பட்டுள்ளது. 
எனக்கு யாரும் மாலை போட வேண்டாம் இன்னும் ஐந்து வருடம் என்னை இந்த அமைச்சுப் பதவியில் இருக்க விட்டாலே போதும். தோட்ட மக்களின் வீடமைப்பு பிரச்சினைக்கு முற்றுமுழுதான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும். அதற்கு பிரதேச மக்கள் பிரதிநிதிகளின் முழுமையான ஒத்துழைப்பும் தேவை எனக் கூறினார்.