நாட்டில் காதலர் தினம், பெண்கள் தினம், சிறுவர் தினம், எயிட்ஸ் தினம் எனப் பல்வேறு தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்ற போதும் எதற்காக தேயிலை தினம் மறைக்கப்பட்டது. மலையக மக்கள் எழுச்சி பெறக் கூடாது என்ற காரணத்திற்காகவா சர்வதேச தேயிலை தினம் இவ்வளவு காலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என அருட்தந்தை சக்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு மலையக உரிமைக் குரல், மலையக சமூக ஆய்வு மையம், மலையக தமிழ் இளம் தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம், மலையக தொழிலாளர் வர்க்க தோழமை அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போதே அருட்தந்தை சக்திவேல் இதனைத் தெரிவித்தார்.

 ‘நாட்டில் காதலர் தினம், பெண்கள் தினம், சிறுவர் தினம் எனப் பல்வேறு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், சர்வதேச தேயிலை தினம் மாத்திரம் கொண்டாடப்படாது, இத்தினம் மறைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 15ஆம் திகதி, சர்வதேச தேயிலை தினம். இத்தினம் எவரும் அறிந்திருப்பதாக தெரியவில்லை. மலையக மக்கள் எழுச்சி பெறக் கூடாது என்ற காரணத்திற்காகவா இத்தினம் மறைக்கப்பட்டு வருகின்றது. 

அண்மையில் சம்பள உயர்வு கோரி மலைய மக்கள் எழுச்சி கொண்டனர். அந்த எழுச்சியை அடக்குவதற்காக சம்பள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தம் ஒரு மாதம் கடக்கும் முன்னரே மீறப்பட்டுள்ளது.